Pages

Saturday, October 11, 2014

உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அழைப்பு

சென்னை , 09 October 2014

சென்னையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்பில்லாமல் உள்ள இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி., எச்.எஸ்.சி., பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போர் சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டும்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உதவித் தொகை விண்ணப்பங்களை பெற நந்தனம் தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வரும் 40 வயதுக்குள்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வயது வரம்பு 45. விண்ணப்பிப்போர் தனியார், சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்கவேண்டும். அரசு நிர்ணயித்துள்ள பிற தகுதிகளையும் பெற்றிருக்கவேண்டும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டு உயிர் பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி, குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.

ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment