
செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழி தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நூபுர் பரத்வாஜின் அர்ப்பணிப்பு, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்காக இருந்து வருகிறது.
ஜெய்பூர்: வாய் பேச முடியாத, காது கேளாத மனிதர்களின் சிரமங்கள் சொல்லிமாளாது, தினசரி அவர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். ஆனால், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தீக்குச்சியாக இருக்கிறார் நூபுர் பரத்வாஜ். யார் இவர்? இவருக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் வாழ்க்கையில் நூபுர் பரத்வாஜ் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதை அறிய ஒரு தசாப்தம் பின்னோக்கி செல்ல வேண்டும்.
சட்டக்கல்லூரி மாணவியான நூபுர் பரத்வாஜ், தனது பள்ளி காலத்திலேயே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளின் கஷ்டத்தை நேரில் பார்த்து அறிந்தவர். தனது 10வது வயதில் 5ஆம் வகுப்பு மாணவியாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவர், இத்தகைய குறைபாடுடன் இருந்த சக மாணவியுடன் நட்பில் இணைந்தார். நூபுர் பரத்வாஜ் சிறுவயதில் இருந்தே, அவருடைய அப்பா சைகை மொழியில் இத்தகைய குறைபாடு உள்ளவர்களோடு பேசியதை கவனித்ததாலோ என்னவோ, அவருக்கு தனது தோழி என்ன பேசுகிறாள் என்பதை ஓரளவு ஊகிக்க முடிந்தது.
பள்ளி பருவத்தில் சக தோழியுடன் பேசிய போது, அவர்களின் கஷ்டத்தை ஓரளவு புரிந்துகொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளாக அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தை தனது மனதில் ஏற்றிக்கொண்டார். அதற்காக, அவர்கள் பேசுவதை மொழிபெயர்க்க ஆரம்பித்த அவர், நாளடைவில் அவர்களின் சைகை மொழியை புரிந்துகொள்ளும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார்.
இதுதொடர்பாக பேசும் நூபுர் பரத்வாஜ், "காது கேளாத, வாய் பேச முடியாத முடியாக மக்களுக்காக இயங்க வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே என் மனதில் இருந்து வந்தது. அதற்கான வாய்ப்பும் உருவான நிலையில், அவர்களின் சைகை மொழியினை திறம்பட கற்றுக்கொண்டேன். எங்கே இத்தகைய குறைபாடு உடையவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்ய வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக்கொண்டேன். அவர்களுக்காக தொடர்ந்து இயங்க தொடங்கினேன். அதுதான் என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட திருப்புமுனையாக அமைந்தது" என்றார்.

நூபுரின் தந்தை மனோஜ் பரத்வாஜும் காது கேளாத வாய் பேச முடியாதவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதன் ஒருபகுதியாக தனது மகள் நூபுர் பரத்வாஜ் பெயரிலேயே அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.
அப்பாவின் இந்த உணர்வு அர்ப்பணிப்பு குறித்து பேசிய நூபுர் பரத்வாஜ், "அப்பா எனக்கு காது கேளாத குழந்தைகளின் போராட்டங்கள், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாகுபாடு, சமூகம் அவர்களை புறக்கணிக்கும் விதம் குறித்து சிறுவயது முதலே எனக்கு எடுத்துக்கூறியுள்ளார். சிறுவயதில் இருந்தே அப்பாவின் மூலம் இந்த கஷ்டத்தை கேட்டதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படியேனும் உதவி செய்ய வேண்டும் எண்ணம் எனக்குள் தோன்றியது. அதை தற்போது என்னுடைய படிப்பு மூலம், அவர்களின் மொழியினை புரிந்தவள் என்ற அடிப்படையிலும் செய்து வருகிறேன்" என்றார்.
சட்ட படிப்பு மூலம் காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு எப்படியான உதவியை செய்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு சிறுமி ஒருவருக்கு உறவினர் ஒருவரால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார். அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை கூட சொல்லத் தெரியவில்லை. இதனால் இந்த குற்றம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை கூட போலீசாரால் பதிவு செய்ய முடியவில்லை. சம்பவம் தொடர்பாக நான் தலையிட்டதால், அந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை என்னிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அந்த சிறுமிக்கு சட்ட உதவிகள் கிடைத்து" என்றார்.
செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழி தினமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், நூபுர் பரத்வாஜ் போன்றோரின் அர்ப்பணிப்பு காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்காக இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.
No comments:
Post a Comment