Pages

Saturday, September 2, 2017

செவித்திறன் பள்ளியின் முன்னேற்றத்திற்கு செவி சாய்க்குமா அரசு! பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

30.08.2017
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கருப்பையா என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார். அதில்,”விருதுநகர் மாவட்டம் சூலக்கரைப் பகுதியில், 1981-ம் ஆண்டு முதல் செவிக்குறைபாடுடைய மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 19 மாணவிகள் உட்பட 49 மாணவர்கள் பயில்கின்றனர். 13 ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்தப் பள்ளியில் 27 பணியிடங்கள் உள்ள நிலையில், தலைமை ஆசிரியை, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட ஏழு பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக உள்ளன. மேலும், இந்தப் பள்ளியின் மின் இணைப்பு, குடிநீர் மற்றும் பயன்பாட்டுக்கான நீர் செல்லும் குழாய்கள் சேதமடைந்துள்ளன. செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகத்தில் 11 அரசுப் பள்ளிகளே உள்ளன. அந்தப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, சூலக்கரை பள்ளியை சீரமைத்துத் தர உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பள்ளியில் 51 மாணவர்கள் உள்ளனர். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பள்ளியில் 10 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியிடம் நிரப்பப்படும். இந்தப் பள்ளியில் 51 மாணவர்களுக்கு 13 ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பள்ளி மற்றும் விடுதியை மேம்படுத்துவதற்கு 20 லட்ச ரூபாய் தேவை எனத் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து, இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தின் மாநில ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை தீர்ப்புக்காக செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment