பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் மேல்நிலைப் பள்ளியில், காடுகளை உருவாக்கும் அரிய நோக்குடன் விதைப்பந்துகள் தயாரிக்கும் சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பள்ளித் தலைமை ஆசிரியை ஜான்சி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், பள்ளித் தாளாளர் ஜேக்கப், ஓய்வு பெற்ற தாசில்தார் முத்துசாமி, மற்றும் ஹெலன்ஜாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஹரிஹர செல்வன், பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன், "ஒரு கோடி விதைப்பந்துகள் உருவாக்கும்" இலக்குடன் செயல்பட்டு வருகிறார். அவர் மாணவர்களுக்கு, விதைப்பந்துகளை எப்படித் தயாரிக்க வேண்டும், அதன் அவசியம் என்ன, மற்றும் காடு வளர்ப்பில் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். திருமாறனின் உரையை, சைகை மொழி பெயர்ப்பாளர் சுபா, மாணவ, மாணவிகளுக்குப் புரியும் வகையில் சைகை மொழியில் மொழிபெயர்த்து, அவர்களும் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவினார்.
இந்தச் சிறப்பான நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் எனப் பலர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பசுமைப் படை பொறுப்பாசிரியை பாலின்ஜோன்ஸ் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்திருந்தார்.
காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் காடு வளர்ப்பு போன்ற சமூகப் பொறுப்புமிக்கப் பணிகளில் ஆர்வம் காட்டியது, எதிர்காலச் சமுதாயத்திற்கு நம்பிக்கையூட்டும் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.
No comments:
Post a Comment