உலக செவித்திறன் தினமான மார்ச் 3 அன்று நிகழ்த்தப்பட்ட இச்சாதனை, மேம்பட்ட செவித்திறன் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது.04.04.2026 சென்னை அப்பல்லோ மருத்துவமனை தமிழ்நாட்டின் முதல் 'Cochlear Nucleus Nexa” எனப்படும் இம்ப்ளான்ட் (செவித்திறன் கருவி) பொருத்துதல் அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
உலக செவித்திறன் தினமான மார்ச் 3 அன்று நிகழ்த்தப்பட்ட இச்சாதனை, மேம்பட்ட செவித்திறன் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற இம்மாநிலத்தில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது. டாக்டர் வெங்கடகார்த்திகேயன் சொக்கலிங்கம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், இந்த நவீன அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதன் மூலம், இந்த நவீன காக்லியர் இம்ப்ளான்ட் தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்திருக்கின்ற சிறப்பு சிகிச்சை மையங்களில் ஒன்றாக அப்போலோ மருத்துவமனை உருவெடுத்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமிக்கு இந்த முன்னோடி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இச்சிகிச்சைக்காகவே அவளது சொந்த ஊரிலிருந்து அச்சிறுமி சென்னைக்கு பயணம் செய்து வந்துள்ளார். இது குழந்தைகளுக்கான செவித்திறன் சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனையின் பிரபல்யத்தையும், இந்தியாவிற்கும் அப்பால் பிற நாடுகளில் அதற்கு வளர்ந்து நற்பெயரையும் சுட்டிக்காட்டுகிறது. அந்தச் சிறுமி பிறந்தது முதலே இரு காதுகளிலும் கடுமையான செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாள். அதற்கும் கூடுதலாக, பிறப்பிலிருந்தே பேச்சு மற்றும் மொழித் திறனிலும் குறைபாடு அச்சிறுமிக்கு இருந்தது.
இனிவரும் வாரங்களில் அச்சிறுமிக்கான அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கப்பட உள்ளது. அப்போது, ஒலியை உள்வாங்கும் வெளிப்புற கருவி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கேட்கும் திறனை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக அக்கருவி புரோக்ராம் செய்யப்படும். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவப் பராமரிப்பு நடைமுறைகளின்படி, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும் இச்சிறுமி நலம்பெற்று வருகிறார்.
NEXOST சிப்செட் மூலம் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் காக்லியர் இம்ப்ளான்ட் அமைப்பான 'Cochlear Nucleus Nexa', மென்பொருள் புதுப்பிக்கப்படும் நிகழ்தரவுகளை ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் எதிர்காலத்தில் வரும் மென்பொருள் மேம்பாடுகளை மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யாமலேயே பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஒலியின் தெளிவை அதிகரிக்கின்றன. குறிப்பாக, வகுப்பறைகள் மற்றும் அதிக சத்தம் இருக்கும் நெரிசலான பகுதிகள் போன்ற சவாலான சூழல்களிலும் ஒலியைத் தெளிவாகக் கேட்கவும், பேச்சுத் திறனையும் தகவல் தொடர்பையும் மேம்படுத்தவும் இது உதவும்.
இந்த சிறப்பான சாதனை குறித்து, சென்னை அப்போலோ மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை (ENT) சிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணரும், தலை மற்றும் கழுத்துக்கான ரோபோடிக் அறுவைசிகிச்சை பிரிவின் முதன்மை மருத்துவருமான டாக்டர் வெங்கடகார்த்திகேயன் சொக்கலிங்கம் கூறுகையில், "குழந்தைகளுக்கு, எதிர்காலத்துக்கு ஏற்ற இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ந்து ஒலிகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைப்பது, அவர்களின் பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சி பெறுவதை கணிசமாக மேம்படுத்தும்.
அவர்களின் கல்வித்திறன், சமூகத்துடன் பழகும் திறன் ஆகியவை மேம்படுத்துவதோடு, மூளையின் செவிப்புலன் நரம்புகளின் வளர்ச்சிக்கும் இது உதவும். இளம் நோயாளிகளுக்கு சிறந்த நீண்டகால பலன்களை உறுதி செய்வதற்காக, அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்துடன், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய முழுமையான பராமரிப்பு மற்றும் முறையான மறுவாழ்வு பயிற்சிகளை வழங்குவதிலும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்," என்றார்.
அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறுகையில், "இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை தொழில்நுட்ப செயல்தளத்தில் ஒரு மைல்கல் நிகழ்வாகும். அதற்கும் கூடுதலாக, உலகத்தரம் வாய்ந்த, மேம்பட்ட செவித்திறன் தீர்வுகளை வழங்குவதற்கான எங்களின் திறனையும், தொழில்நுட்ப வசதிகளையும் இது வலுவாக சுட்டிக்காட்டுகிறது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சைகளை வழங்கி அவர்கள் நலம் பெறுவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
அப்போலோ மருத்துவமனையில், குழந்தைகளை மையமாகக் கொண்ட விரிவான சிகிச்சையை வழங்க, எங்களின் மருத்துவக் கட்டமைப்பு திறன்களையும், மருத்துவ நிபுணத்துவத்தையும் நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். மேலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. என்று தெரிவித்தார்.
இச்சாதனை, செவித்திறனை வழங்குவதற்கான சிகிச்சையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் காக்லியர் இம்ப்ளான்ட் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தியாவிலும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற நாடுகளிலும் செவித்திறன் குறைபாட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கான உத்திரவாதத்தையும் இது அளிக்கிறது.
அப்போலோ மருத்துவமனை - ஓர் பார்வை
1983-ம் ஆண்டில் டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்களால் சென்னையில் தொடங்கப்பட்ட அப்போலோ குழுமத்தின் முதல் மருத்துவமனை, இன்று உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளமாக வளர்ந்துள்ளது. 76 மருத்துவமனைகள், 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 நோயறிதல் மையங்கள் மற்றும் 800- க்கும் அதிகமான டெலிமெடிசன் மையங்களுடன் இது உலகளவில் சுகாதாரத் துறையில் முன்னணி வகிக்கிறது.
இதய சிகிச்சையில் 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவைசிகிச்சைகளைச் செய்து உலகளவில் அப்போலோ சாதனைப் படைத்திருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும், சிகிச்சை நெறிமுறைகளையும் கொண்டு சிகிச்சை வழங்குவதற்கு ஆராய்ச்சியிலும், புத்தாக்க கண்டுபிடிப்பிலும் அப்போலோ தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அப்போலோ குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள், நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை பலனை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.