FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, June 17, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயன்பெற ஏதுவாக நடவடிக்கை


15.06.2024
உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயன்பெற ஏதுவாக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் பிரிவு 32 (1) இன்படி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்லூரி சேர்க்கை பெறுவதில், பின்தள்ளப்படுவதாகவும், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், இவற்றைக் களைந்து கல்வி பயிலுவதில் கல்வி உரிமைகளை 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அளவில் கிடைக்க பெறச் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில் விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கீழ் குறிப்பிட்டுள்ள கல்லூரிகளில் கட்டண விலக்கு பெற்று பயனடையலாம். மேலும், இது குறித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 044-27662985, கைப்பேசி எண்: 9499933496 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.




தமிழ்நாட்டில் முதல் முறையாக உறுப்பு தானம் செய்த மாற்றுத்திறனாளி பெண் - மரியாதை செலுத்திய அரசு!

உயிரிழந்த அரசம்மாள்
15.06.2024
  • நெல்லையில் உடல் உறுப்புகளை தானம் செய்த மாற்றுத்திறனாளி பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளி பெண் உடல் உறுப்புகளை தானம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் மணிசேகர். இவரது மனைவி அரசம்மாள். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளியான இவர், பாளையங்கோட்டை குலவணிகர்புரத்திலுள்ள காது கேளாதோர் திருச்சபைக்குச் சொந்தமான பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 10-ம் தேதி அரசம்மாள் தனது தோழியான காந்திமதி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ரேசன் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தாழையூத்து ரயில்வே பீடர் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பின்னால் அமர்ந்திருந்த அரசம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

தானமாக பெறப்பட்ட அரசம்மாளின் உறுப்புகள்

இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்து 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மூளை நரம்பியல் நிபுணர்கள், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மூளை செயல்பாடு படிப்படியாகக் குறைந்து மூளை செயலிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து மருத்துவர்களிடம் சம்மதம் தெரிவித்தனர்.

குடும்பத்தினர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் கருவிழிகள், தோல், கல்லீரல் ஆகிய பாகங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன. கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கருவிழிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசம்மாளின் உடலுக்கு அரசு சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் ரேவதி பாலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடலானது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரசம்மாளின் உடலுக்கு செலுத்தப்பட்ட அரசு மரியாதை

பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தழையூத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் செய்த அரசம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மூத்த சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த 2023-ம் ஆண்டு வேலூரில் முதல் முறையாகப் பெண் ஒருவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இந்நிலையில், முதல் முறையாக மாற்றுத்திறனாளி பெண்ணான அரசம்மாள், தற்போது தனது உடல் உறுப்புகளை தானம் செய்து பலருக்கு வழிகாட்டியாக மாறியுள்ளார்.

அரசம்மாளின் கணவர் மணிசேகரிடம் பேசினோம், “என்னோட மனைவி மாற்றுத்திறனாளி என்றாலும் எந்த வேலையையும் சுறுசுறுப்பா செய்யக்கூடியவர்.குடும்பத்துல எல்லாரு மேலயும் அன்பா இருப்பா. நம்மளால முடிஞ்ச உதவியை அடுத்தவருக்கு செய்யணும்னு நினைக்கக்கூடியவள். உதவக்கூடிய மனப்பான்மை நிறைய உண்டு. ஒருத்தருக்கு உதவி செஞ்சா இக்கட்டான நேரத்துல நமக்கு யாராவது உதவி செய்வாங்கன்னு அடிக்கடி சொல்லுவா. ஏதோ விதி வசத்துனால என் மனைவி இறந்துட்டா. ஆனா, அவளோட உறுப்புகளை தானம் செஞ்சது மூலமா மூணு பேரோட வாழ்கை சிறப்பா அமையும். அந்த மூணு பேரைப் பார்க்கும் போது என் மனைவி நியாபகம்தான் வரும். உடல் உறுப்புகளை தானம் செஞ்சதை நாங்க ரொம்ப பெருமையா நினைக்கிறோம்” என்றார்.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் ரேவதி பாலனிடம் பேசினோம், “2019-ல் ஒருவர், 2022-ல் இருவர், 2023-ல் 5 பேர், 2024-ல் இதுவரை 2 பேர் என 10 பேரிடமிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. 10 பேரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட 15 சிறுநீரகங்கள், 5 இதயங்கள், 4 நுரையீரல்கள், 9 கல்லீரல்கள், 3 பேரிடம் தோல்கள், 20 கருவிழிகள் என 56 உறுப்புகள் மூலம் பலர் பலன்பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானத்தை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வரும் நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி அதற்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது” என்றார்.


 


Sunday, June 16, 2024

வேலூரில் வீடு.. 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் .. மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு



15.06.2024 
மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவர்களின் உடலில் உள்ள குறைகளின் அளவைப் பொறுத்து மத்திய மற்றும் தமிழக அரசின் உதவிகளை பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று நலவாரியமும் இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க கடன்வசதி, மாற்றுத்திறனாளிகள் பெட்டிக்கடை வைத்துக் கொள்ள அனுமதி, மாதம் மாதம் உதவி தொகை, சக்கர நாற்காலி, இலவச பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இதுதவிர வீடு வாங்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வீடும் கட்டித்தருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகையில் ரூ.1.5 லட்சம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் முதல் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குளவிமேட்டில் 12 வீடுகளும், டோபிகானாவில் 3 வீடுகளும், பத்தலப்பள்ளியில் 290 வீடுகளும், கரிகரியில் 230 வீடுகளும் என மொத்தம் 535 வீடுகள் வழங்க தயாராக உள்ளது. தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் வருகிற 18-ந் தேதி முதல் 30-ந் தேதிக்குள் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்" இவ்வாறு வேலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு


16.06.2024 
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றும் மருத்துவர், தனியார் நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா அன்று விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி,

* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சி தலைவர் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.25,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர் – 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், மற்றும் சான்றிதழ்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள், “https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், விவரங்களை இணைத்து 5.7.2024க்குள் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.விருதுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவினரால் தெரிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை



காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பருவப் பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் தங்கி பயிலும் வண்ணம் தனித்தனி விடுதி வசதிகளுடன் கூடிய பள்ளி.

இப்பள்ளியில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிப்பதற்கென்றே சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள், பேச்சுப் பயிற்சியும் அளிக்கின்றனர்.

பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு உணவு, கல்வி பயிலத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், கல்வி உதவித் தொகை, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை ஆகியவையும் வழங்கப்படுகிறது.

மேலும் கணினி வழி கற்பித்தல், ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லுதல், மாணவர்களின் விளையாட்டுத் திறனை அதிகரிக்க விளையாட்டுத் திடலுடன் கூடிய பள்ளியாகவும் இருந்து வருகிறது.

மாணவர்களுக்கு விலையில்லா காதொலிக் கருவிகளும் வழங்கப்படும். பேச்சுப் பயிற்சி, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் சேர்க்கை பெற தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் - 631 502 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

கூடுதல் விவரங்கள் வேண்டுவோர் 044 - 27267322 மற்றும் 95974 65717 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.




Sunday, May 26, 2024

காது கேளாத வாய் பேச முடியாத பழங்குடியின சிறுமி தீவைத்துக் கொலை.. நடவடிக்கை எடுக்காத காவல்துறை




23.05.2024, ராஜஸ்தானில் கைது கேளாத வாய்பேச முடியாத 11 வயது பழங்குடியின சிறுமி தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கரொளலி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, உள்ளே இருந்த தாய்க்கு அலறல் சத்தம் கேட்டது.

வெளியே ஓடிவந்து பார்த்த போது . வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்ணையில் மகள் உடலில் தீக்காயங்களுடன் வலியால் கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார். அப்போது அந்த சிறுமி தாயிடம் சைகைகளில், இரண்டு பேர் தனக்கு தீ வைத்துவிட்டு தப்பி ஒடிவிட்டதாக கூறினாள்.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று (மே 20) சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி தீவைக்கப்ட்ட சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள்ளது.

முன்னதாக கடந்த மே 14 ஆம் தேதி மருத்துவமனையில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வந்த காவல்துறையினர் காட்டிய புகைப்படங்களில் இருந்த ஒருவனை சிறுமி அடையாளம் காட்டியது குறிப்பிடத்தக்கது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தடயங்களை அளிக்க தீவைத்து எரிக்கப்பயிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே உடல் முழுதும் தீக்காயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் காட்சிகள் வெளியாகி காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கின்றன.




ராஜஸ்தானில் கொதிக்கும் மக்கள்! 11 வயது காது கேளாத, வாய்பேச முடியாத சிறுமி பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!



22.05.2024
ராஜஸ்தானில் 11 வயது காது கேளாத வாய் பேச முடியாத சிறுமி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் இன்று நெஞ்சை உலுக்கும் செய்தி ஒன்று வெளிவந்தது. 11 வயது காது கேளாத வாய் பேச முடியாத சிறுமி பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்து 11 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சமூக ஊடகங்கள் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றன. தற்போது #Bhajanlal_Sharma_Istifa_Do மற்றும் #Dimple_Meena_Ko_Nyaya_Do ஹேஷ்டேக்குகள் எக்ஸ் பக்கத்தில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளன.

முதற்கட்ட விசாரணையில், சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டு, வெளியே ஓடி வந்து அவரது தாய் பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுமி தன் தாயிடம் சைகைகளைப் பயன்படுத்தி, இரண்டு பேர் தனக்குத் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக சிறுமி கூறியதாகத் தெரிகிறது. அவள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஜெய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.

புகார் அளித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை:


5ம் வகுப்பு படித்து உயிரிழந்த சிறுமியின் தந்தை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட துணை ஆட்சியரிடம் மனு ஒன்றை இன்று அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அந்த மனுவில் இன்று, “நான் 11 மே 2024 அன்று ஹிண்டான் சிட்டியின் நியூ மண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். யார் என்றே தெரியாத சில நபர்கள் எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்திருக்கலாம் என காவல்துறையில் புகார் அளித்தேன்.

இதனை அடுத்து மகளை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தோம், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் எனது புகாரை காவல்துறையினர் பதிவு செய்யவில்லை” என தெரிவித்தார்.

மேலும் அந்த மனுவில், “தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. இந்த சம்பவம் நடந்து 11 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனது மகள் இறப்பதற்கு முன், குற்றவாளிகளை அவர்களின் புகைப்படங்கள் மூலம் அடையாளம் கண்டுகொண்டாள். அதன் பிறகும் யாரும் கைது செய்யப்படவில்லை. நிபுணர் முன்னிலையில் எனது மகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் புதுமண்டி போலீசார் முழு அலட்சியம் காட்டினர். எனவே இந்த வழக்கை முழுமையாக விசாரித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.
 
காவல்துறையினர் கூறியது என்ன..?

இதுகுறித்து காவல்துறை தனது ட்விட்டர் பதிவில், 'புதிய மண்டி ஹிண்டவுன் காவல் நிலையத்தின் கீழ் நடந்த, பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, போலீஸார் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ வசதிகளை வழங்கினர். சிறுமியின் தோல் மாதிரிகள் மற்றும் ஆடை மாதிரிகள் எஃப்எஸ்எல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விஞ்ஞான நிபுணர்களின் கருத்துப்படி, இந்த விஷயத்தில் முன்கூட்டியே ஆய்வு செய்யப்படும். சிறுமி காது கேளாத, வாய் பேச முடியாதவராக இருந்ததால், சைகை மொழி நிபுணர் உதவியுடன் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆதாரம் அடிப்படையிலான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் மர்மத்தை துடைக்க ராஜஸ்தான் காவல்துறை உறுதிபூண்டு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. போலீசார் அறிவியல் முறையில் பாரபட்சமின்றி ஆய்வு நடத்தி வருவதால், இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை மிக விரைவில் வெளிவரும்’ என தெரிவித்துள்ளனர்.




சைகை மொழி


24.05.2024
‘‘உலகம் சத்தங்களால் மட்டுமல்ல மௌனங்களாலும் நிறைந்தது. நம்மில் பலருக்கும் கேட்கும் சத்தம் சிலருக்கு மட்டும் கேட்பதில்லை. கேட்கும் திறனற்று… வாய்பேச முடியாதவர்களாய்… விரல் அசைவில் மட்டுமே சிலர் பேசிக் கொள்கிறார்கள். நாம் பேசுகின்ற மொழிகளைப் பேசாத இவர்களின் மௌன மொழிக்கு ஆழமும் அர்த்தமும் அதிகம்.70 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் செவித்திறன் குறைபாடுடன் வாய்பேச முடியாதவர்களாக உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர். இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் வசிக்கின்றனர். இதில் 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இங்கு சைகை மொழி கற்கும் சூழல் இருக்கிறது.

சைகை மொழிக்கான கல்வி நிறுவனங்கள் கேரளாவிலும், டெல்லியிலும் மட்டுமே செயல்படுவதால் இங்கு சென்று படிப்பதற்கு ஆகும் பணச் செலவு மற்றும் பயண தூரம் அதிகம் என்பதால் யாரும் முன்வருவதில்லை. விளைவு, காதுகேளாத வாய்பேச முடியாதவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று பலருக்கும் இங்கு தெரிவதில்லை. இதனால் பெரும்பாலான காதுகேளாதவர் புறக்கணிக்கப்படுகிறார்கள். அல்லது கேலிக்கு உள்ளாகிறார்கள்.

சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நமது நாட்டில் சுத்தமாகவே இல்லை’’ என பேச ஆரம்பித்தவர், பிரபல கல்லூரியின் சோஷியல் வொர்க் துணை பேராசிரியர் அல்போன்ஸ் ரெத்னா. டிசம்பர் 3 இயக்கத்தின் உதவியுடன், சைகை மொழி பேசுபவர்களுடன் இணைந்து, சைகை மொழிக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு ஒன்றை மிகச் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார். அவரிடம் பேசியதில்…

‘‘இதுவும் நாம் இந்த சமூகத்திற்கு செய்யும் சேவைதான்’’ என்றவர், ‘‘ஸ்பானிஸ், பிரஞ்சு என புதிதாக ஒரு மொழியை கற்கும்போதே, இன்னொரு மொழி பேசும் சமூகத்துடன் நாம் தொடர்பு கொள்ளப் போகிறோம், நமது எண்ணங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளப்போகிறோம் என்கிற மகிழ்ச்சி ஏற்படும். அதுபோலத்தான் சைகை மொழியும். நம்மோடு வாழுகிற ஒரு சமூகத்தை இணைக்கின்ற பாலம்தான் சைகை மொழி. இரண்டு கைகளையும் உயரே தூக்கி அசைப்பதுதான் சைகை மொழி பேசுபவர்களின் கைதட்டல். இவர்களின் கைதட்டல் இப்படித்தான் என பொதுவெளியில் யாருக்கும் தெரிவதில்லை’’ என்கிறார் பேராசிரியர்.

‘‘தங்கள் உளவியல் சிக்கலையும், பிரச்னைகளையும் பிறரிடம் வெளிப்படுத்த முடியாத நிலையில், குரலற்றவர்களாக பெரும்பாலும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, அவர்கள் சமூகத்து மக்களிடத்தில் மட்டுமே இவர்கள் பழகுவார்கள். இது வேறொரு சூழலை அவர்களுக்குள் ஏற்படுத்துவதை எங்களால் உணர முடிந்தது.

2010ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வலராக நுழைந்து, அவர்களின் பிரச்னைகளை முன்னெடுப்பது, போராட்டங்களை வழிநடத்துவது, அவர்களோடு களத்தில் நிற்பதென இயங்கத் தொடங்கினேன். அப்போது காது கேளாத மாற்றுத்திறனாளி சமூகத்து மக்களுடன் நாம் இணைந்திருக்கிறோமா என்கிற கேள்வி என்னைத் தொலைத்துக் கொண்டே இருந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பே எபிளிட்டி என்கிற தன்னார்வ அமைப்பின் மூலம் சைகை மொழியின் சில அடிப்படை விஷயங்களை பயிற்சியாக எடுத்துக்கொண்டு, அந்த சமூகத்தினருடன் சைகையில் பேசி பேசியே அவர்கள் மொழியினை கற்றுக் கொண்டேன். அதன் தொடர்ச்சிதான் இந்த 3 நாள் பயிற்சி வகுப்பு. என்னோடு ரோஜா, நித்யா, நந்தனா என சைகை மொழி பேசுபவர்களும், சைகை மொழி பெயர்ப்பாளர்கள்(interpreters) எனச் சிலரும் இணைந்தனர்.

உயர் பதவிகளை அலங்கரிக்கும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளில் சிலரை முன்னிறுத்தி 20 பேருடன் பயிற்சி வகுப்பு மிகச் சிறப்பாகவே நடந்தது. அன்றாடம் வீடுகளில் பேசும் இயல்பான வார்த்தைகள் இங்கு சைகை மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டது’’ என்றவரைத் தொடர்ந்து பேசியவர் சைகை மொழி பெயர்ப்பாளர் ரோஜா.‘‘தாய்மொழி பேச பள்ளிக்கூடம் செல்லவேண்டும் என்கிற அவசியம் இல்லைதானே. பிறந்ததில் இருந்தே தாய் மொழியை உள்வாங்கித்தானே வார்த்தைகளை பேசப் பழகுகிறோம்.

அதுபோலத்தான் எனக்கு இந்த மொழி. என் பெற்றோர் இருவருமே வாய்பேச முடியாத காதுகேளாத மாற்றத்திறனாளிகள். பெற்றோருடன் சைகை மொழி பேசிப்பேசியே, அந்த மொழி இயல்பாக எனக்கு வந்தது. அவர்களின் நண்பர்களும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களோடும் சைகை மொழியிலேயே பேசும் நிலை இருந்தது. எனது பெற்றோரால் சைகை மொழி எனக்கும் என் அண்ணனுக்கும் தாய்மொழி ஆனது. நாங்கள் சைகை மொழி பெயர்ப்பாளராகவே மாறிப்போனோம்’’ என்கிறார் ரோஜா வெகு இயல்பாக.

‘‘பெற்றோர் இருவருமே டெஃப் என்பதால் அவர்கள் சமூகத்தில் எங்களை சில்ட்ரன் ஆஃப் டெஃப் அடல்ட் (CODA) அதாவது, கோடா என அழைப்பார்கள். அதுவே 18 வயதிற்குள் இருந்தால் கிட் ஆஃப் டெஃப் அடல்ட் (KODA) என்பார்கள்’’ என்றவர், ‘‘எழுத்தும் இலக்கணமும் இன்றி நமது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மொழி உண்டென்றால் அது சைகை மொழிதான்’’ என்கிறார் அழுத்தமாக.

‘‘300 விதமான சைகை மொழி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் அவர்களின் மொழிக்கேற்ப சைகை மாறும். எனது அண்ணன் பி.காம் முடித்து, பிரிட்டிஷ் சைன் லாங்வேஜில் மொழி பெயர்ப்பாளராக லண்டனில் பணியாற்றி வருகிறார். இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பும், பிரிட்டிஷ் நாட்டின் ஆங்கில உச்சரிப்பும் ஒன்று என்பதால் அந்த நாட்டின் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவரால் சுலபமாக சைகையில் மொழிப்பெயர்ப்பு செய்ய முடிகிறது.

அவரைப்போலவே நானும் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டே, ஃப்ரீலான்ஸ் சைன் லாங்வேஜ் மொழி பெயர்ப்பாளராக சென்னையில் செயல்படுகிறேன். வாய் பேச முடியாது என்பதுடன் பார்வையும் தெரியாது என்கிற மாற்றுத்திறனாளிகளின் கைகளைத் தூக்கி சைகை மொழி செய்கிற, தொட்டுணரும் மொழி பெயர்ப்பாளர் (tactile interpreter) பணியும் எனக்குத் தெரியும்’’ என நம்மை மேலும் ஆச்சரியப்படுத்துகிறார் சட்டக் கல்லூரி மாணவி ரோஜா.‘‘நமது நாட்டில் காதுகேளாதோர் சமூகத்திற்கு சைகை மொழி தெரிந்த வழக்கறிஞர்கள் இல்லை. இவர்கள் சட்டப் பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் சைகை மொழி பெயர்ப்பாளராக அவர்களுக்காக நீதிமன்றத்தில் நான் இருப்பேன்’’ என கூடுதலான தகவலையும் பதிவு செய்து விடைபெற்றார்.

அவரைத் தொடர்ந்து பேசியவர் சைகை மொழி பெயர்ப்பாளரான நித்யா. ‘‘மொழி தெரியாத ஊர்களில் இருக்கும்போது, நமது தமிழ் மொழியினைப் பேசுகிற குரல் எங்காவது ஒலித்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்துவோமோ அதுமாதிரிதான் இந்த மொழியும். அவர்கள் சமூகத்தில் இல்லாத ஒரு நபர் அவர்கள் மொழியை பேசினால் அது அவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் வசதி’’ என்றவர், ‘‘உன் சமூகத்திற்காக நான் இருக்கிறேன் என்கிற அடிப்படை சிந்தனைதான் என்னையும் இதில் இணைத்தது. இது என்னால் முடிந்த ஒருசிறு பங்களிப்பு. என்னோட கடமை’’ என்கிறார் புன்னகைத்தவராக.

‘‘இவர்களுக்காக நான் செய்வது லீகல் இன்டர்பிரிட்டேஷன். அதாவது, காவல் நிலையங்களிலும் வழக்கு சார்ந்த விஷயங்களிலும் பொது நிகழ்ச்சி மேடைகளிலும் செய்தியை இவர்களுக்கு மொழி பெயர்ப்பது. கூடவே தனியார் தொலைக்காட்சிகளிலும் சைகை மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறேன்.

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்த நிலையில் தன்னார்வ அமைப்பில் இணைந்து பணி செய்யும் ஆர்வம் இயல்பாய் எனக்கு வந்தது. அப்போது சான்றிதழ் படிப்பாக சைகை மொழி படித்து, காதுகேளாதவருக்கான அமைப்பு ஒன்றில் பணியாற்றினேன். அந்த மக்களுடன் பேசிப் பேசியே சைகை மொழி இயல்பாக வந்தது. பிறகு சைகை மொழி பெயர்ப்பாளருக்கான சான்றிதழ் படிப்பையும் முடித்து இதனையே எனது வேலையாகவும் செய்யத் தொடங்கினேன்.

உணவு தானம், உடை தானம் மாதிரிதான் இதுவும். அவர்களை இந்த உலகத்தோடு தொடர்புபடுத்துகிறோம். அவர்களின் குரலை நமது வார்த்தைகளில் ஒலிக்கிறோம். “ஹாய்” என்கிற இயல்பான வார்த்தையை அவர்களின் சைகை மொழியில் அவர்களுக்குச் சொல்லும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்ச்சிதான் இதில் சேவை. மாற்றுத்திறனாளிகளை பரிதாபத்திற்கு உரியவர்களாக பார்ப்பதை முதலில் நிறுத்திவிட்டு, அடுத்த கட்டத்திற்கு அவர்கள் வாழ்வை நகர்த்திச் செல்ல நம்மால் என்ன செய்ய முடியும் என யோசியுங்கள்’’ என்றவாறே விடைபெற்றார் சைகை மொழி பெயர்ப்பாளர் நித்யா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
நன்றி குங்குமம் தோழி