உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் 17 வயது காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, 21 வயது இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, காவல்துறை அவரைத் தேடிவந்தது. அவர் அலிகார் நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறை, "பாலியல் வன்கொடுமை குற்றவாளி அலிகாரில் மறைந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் சகோதரருடன் சென்றிருக்கிறார். பின்னர் அவர் ராஜ்புரா பகுதியிலுள்ள கிராமத்தில் இருக்கும் தன் சகோதரியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு தங்கியிருந்த அவர் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்கியிருக்கிறார். உடனே, அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார். உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் விஷம் அருந்தியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
குற்றம்சாட்டப்பட்டவரின் சகோதரர் கூறுகையில், ``என் சகோதரர் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக பயந்துகொண்டிருந்தார். அதனால், நாங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துவைக்க சிறுமியின் குடும்பத்தினரைச் சமாதானப்படுத்த முயன்றோம். ஆனால் அவர்கள் மறுத்து, காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்.
போலீஸ் நடவடிக்கை மற்றும் சிறைத் தண்டனைக்கு பயந்து விஷத்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்' எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தீவிரமாக விசாரித்துவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது. காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments:
Post a Comment