அந்தச் சிகிச்சை முறையின் வெற்றி குறித்து புதன்கிழமை (ஜனவரி 24) ஆய்வாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.
ஆறு பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளித்ததில் ஐந்து குழந்தைகளுக்குச் செவித்திறன் கிட்டியதாகக் கூறப்படுகிறது.
சிகிச்சை முடிந்த ஆறு மாதங்களில் அவர்களது பேசும் திறனிலும் முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘ரெஃப்ரெஷ்ஜீன் தெரப்பியூட்டிக்ஸ்’ நிறுவனம் மேற்கொண்ட இந்த சிகிச்சை முறை குறித்த ஆய்வுக் கட்டுரை ‘தி லேன்சட்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.
“இந்த ஆய்வின் முடிவுகள் உண்மையாகவே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. குழந்தைகளின் கேட்கும் திறனும் பேச்சுத் திறனும் ஒவ்வொரு வாரமும் வியப்பளிக்கும் வகையில் மேம்பட்டதைக் கண்டோம்,” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாஸ் கண், காது மருத்துவக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் செங் யி சென் கூறினார்.
சோதனை சிகிச்சையில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருமே ‘ஓட்டோஃபெர்லின்’ எனும் மரபணுவில் ஏற்பட்ட மாற்றத்தால் பிறவியிலேயே காது கேளாதவர்கள்.
மனிதர்கள் செவிமடுக்கும் ஒலிச் சமிக்ஞைகளை காதிலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்ல, ‘ஓட்டோஃபெர்லின்’ புரதம் நன்றாகச் செயல்படுவது அவசியம்.
‘ஓட்டோஃபெர்லின்’ மரபணுவைச் சுமந்து செல்லும் தீங்கு விளைவிக்காத கிருமி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளின் காதின் உட்புறம் செலுத்தி இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் பங்குபெற்ற ஆறு பிள்ளைகளில் ஐவருக்குக் கேட்கும் திறன் கிட்டிய நிலையில், ஆறாவது குழந்தைக்கு ஏன் இன்னும் காது கேட்கவில்லை என்று தெளிவாகத் தெரியவில்லை.
இந்த சிகிச்சை முறைக்கு குறுகியகாலத்திற்கு லேசான பக்க விளைவுகள் மட்டுமே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment