காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்பருவப் பள்ளி முதல் 10-ஆம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் தங்கி பயிலும் வண்ணம் தனித்தனி விடுதி வசதிகளுடன் கூடிய பள்ளி.
இப்பள்ளியில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிப்பதற்கென்றே சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள், பேச்சுப் பயிற்சியும் அளிக்கின்றனர்.
பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு உணவு, கல்வி பயிலத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், கல்வி உதவித் தொகை, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை ஆகியவையும் வழங்கப்படுகிறது.
மேலும் கணினி வழி கற்பித்தல், ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லுதல், மாணவர்களின் விளையாட்டுத் திறனை அதிகரிக்க விளையாட்டுத் திடலுடன் கூடிய பள்ளியாகவும் இருந்து வருகிறது.
மாணவர்களுக்கு விலையில்லா காதொலிக் கருவிகளும் வழங்கப்படும். பேச்சுப் பயிற்சி, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் சேர்க்கை பெற தலைமை ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம் - 631 502 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
கூடுதல் விவரங்கள் வேண்டுவோர் 044 - 27267322 மற்றும் 95974 65717 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment