உயிரிழந்த அரசம்மாள் |
- நெல்லையில் உடல் உறுப்புகளை தானம் செய்த மாற்றுத்திறனாளி பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளி பெண் உடல் உறுப்புகளை தானம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் மணிசேகர். இவரது மனைவி அரசம்மாள். செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளியான இவர், பாளையங்கோட்டை குலவணிகர்புரத்திலுள்ள காது கேளாதோர் திருச்சபைக்குச் சொந்தமான பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 10-ம் தேதி அரசம்மாள் தனது தோழியான காந்திமதி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ரேசன் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தாழையூத்து ரயில்வே பீடர் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பின்னால் அமர்ந்திருந்த அரசம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தானமாக பெறப்பட்ட அரசம்மாளின் உறுப்புகள் |
இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்து 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மூளை நரம்பியல் நிபுணர்கள், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், மூளை செயல்பாடு படிப்படியாகக் குறைந்து மூளை செயலிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து மருத்துவர்களிடம் சம்மதம் தெரிவித்தனர்.
குடும்பத்தினர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் கருவிழிகள், தோல், கல்லீரல் ஆகிய பாகங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன. கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கருவிழிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசம்மாளின் உடலுக்கு அரசு சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் ரேவதி பாலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடலானது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குடும்பத்தினர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மூலம் கருவிழிகள், தோல், கல்லீரல் ஆகிய பாகங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன. கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கருவிழிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் அரசம்மாளின் உடலுக்கு அரசு சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் ரேவதி பாலன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடலானது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரசம்மாளின் உடலுக்கு செலுத்தப்பட்ட அரசு மரியாதை |
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான தழையூத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. உடல் உறுப்புகள் தானம் செய்த அரசம்மாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மூத்த சகோதரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த 2023-ம் ஆண்டு வேலூரில் முதல் முறையாகப் பெண் ஒருவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இந்நிலையில், முதல் முறையாக மாற்றுத்திறனாளி பெண்ணான அரசம்மாள், தற்போது தனது உடல் உறுப்புகளை தானம் செய்து பலருக்கு வழிகாட்டியாக மாறியுள்ளார்.
அரசம்மாளின் கணவர் மணிசேகரிடம் பேசினோம், “என்னோட மனைவி மாற்றுத்திறனாளி என்றாலும் எந்த வேலையையும் சுறுசுறுப்பா செய்யக்கூடியவர்.குடும்பத்துல எல்லாரு மேலயும் அன்பா இருப்பா. நம்மளால முடிஞ்ச உதவியை அடுத்தவருக்கு செய்யணும்னு நினைக்கக்கூடியவள். உதவக்கூடிய மனப்பான்மை நிறைய உண்டு. ஒருத்தருக்கு உதவி செஞ்சா இக்கட்டான நேரத்துல நமக்கு யாராவது உதவி செய்வாங்கன்னு அடிக்கடி சொல்லுவா. ஏதோ விதி வசத்துனால என் மனைவி இறந்துட்டா. ஆனா, அவளோட உறுப்புகளை தானம் செஞ்சது மூலமா மூணு பேரோட வாழ்கை சிறப்பா அமையும். அந்த மூணு பேரைப் பார்க்கும் போது என் மனைவி நியாபகம்தான் வரும். உடல் உறுப்புகளை தானம் செஞ்சதை நாங்க ரொம்ப பெருமையா நினைக்கிறோம்” என்றார்.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியின் டீன் ரேவதி பாலனிடம் பேசினோம், “2019-ல் ஒருவர், 2022-ல் இருவர், 2023-ல் 5 பேர், 2024-ல் இதுவரை 2 பேர் என 10 பேரிடமிருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளது. 10 பேரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட 15 சிறுநீரகங்கள், 5 இதயங்கள், 4 நுரையீரல்கள், 9 கல்லீரல்கள், 3 பேரிடம் தோல்கள், 20 கருவிழிகள் என 56 உறுப்புகள் மூலம் பலர் பலன்பெற்றுள்ளனர். உடல் உறுப்பு தானத்தை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வரும் நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி அதற்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது” என்றார்.
No comments:
Post a Comment