20.05.2019
கோவை : 'காக்ளியர் இம்ப்ளான்ட்' கருவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.நம் நாட்டில் பிறக்கும், 1,000 குழந்தைகளில், நான்கு குழந்தைகளுக்கு கேட்கும் திறன் இல்லை என்பது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில், இந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம், கர்ப்பிணியாக இருக்கும்போது, சாப்பிடும் மருந்துகள், கதிர் வீச்சு, கிருமித்தொற்று உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளின் செவி உள்வாங்கும் திறனை இழக்கின்றன. செவித்திறன் குறைபாடு இருப்பதால், குழந்தைகள் பேசுவதில் பிரச்னை ஏற்படுகிறது.இத்தகைய குழந்தைகளது காதின் உட்புறம் காதொலி கருவி பொருத்தினால், கேட்கும் திறன் கிடைக்கும். இத்தகைய அறுவை சிகிச்சைக்கு 'காக்ளியர் இம்ப்ளான்டேஷன்' எனப்பெயர். செவித்திறன் குறைபாடுள்ள ஏழை குழந்தைகளுக்கு, கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்குபின், பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றாக பேசத்துவங்குவர்.
காதின் உட்புறம் பொருத்தப்படும் இக்கருவியை வழங்க, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒப்பந்தம் புதுப்பிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், கருவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்காக குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment