12.02.2022
புதுக்கோட்டை:தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போட்டி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர். புதுக்கோட்டை நகராட்சி 31-வது வார்டில் வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்.
புதுக்கோட்டை போஸ் நகர் 9-வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சரிதா (வயது 36). 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது கணவர் அங்குள்ள ஒரு தனியார் சோப்பு கம்பெனியில் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இரு வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுப்பிரமணியன் குடும்பத்தினர் பாரம்பரியமாக தி.மு.க.வில் இருக்கிறார்கள். இதையடுத்து சரிதா கட்சி சார்பில் போட்டியிட மனு அளித்து நேர்காணலிலும் பங்கேற்றார். ஆனால் இறுதியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வேட்பாளர் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டார். இருப்பினும் நம்பிக்கை இழக்காத சரிதா சுயேட்சையாக 31-வது வார்டில் போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சரிதாவின் கொழுந்தனார் மணி (கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி) கூறியதாவது:-
எனது அண்ணி சரிதா திறமையானவர். மக்களுடன் சகஜமாக பழகுவார். மக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் முன்னால் போய் நிற்பார். காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் சைகை மூலம் அவரிடம் பேச வேண்டியதில்லை. நமது வாய் அசைவினை வைத்தே நாம் என்ன பேசுகிறோம் என் பதை தீர்க்கமாக உணர்ந்து கொள்வார்.
வாய்பேச முடியாத, காது கேட்காதவர் வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சினைகளை எவ்வாறு கேட்டு, நகரட்சியில் குரல் கொடுப்பார்கள் என சிலர் கேட்கிறார்கள். அதற்கும் அண்ணி (சரிதா) விடை கொடுத்துள்ளார்.
எழுத்துப்பூர்வமாக நகராட்சியில் வாதாடி மக்கள் பிரச்சினைகளை, தேவைகளை பூர்த்தி செய்வேன் என்கிறார். வாக்குறுதிகளுடன், இதனையும் துண்டு பிரசுரமாக அச்சிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்கிறோம். அரசியல் கட்சிகள் பணத்தால் ஜெயித்து விடலாம் என கருதுகிறார்கள். இந்த வார்டில் 80 மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள்.
அண்ணன் மாற்று சமூகத்தை சேர்ந்த அண்ணியை கரம் பிடித்ததால் இருவேறு சமூகத்திலும் ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள். சரிதாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.