07.08.2018
பிஹாரைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும், காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் நடந்துள்ளது. அந்தக் காப்பகத்தில் இருந்து 24 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
பிஹார் மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில், சேவாக் சங்கல்ப் இவான் விகாஷ் சமிதி சார்பில் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமிகள் தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு இரவு உணவில் மயக்க மருந்து கொடுத்து அந்தக் காப்பகம் நடத்துபவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்தக் காப்பகம் நடத்துவோரும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும் காப்பகத்தில் உள்ள 34 சிறுமிகளைப் பலாத்காரம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தக் காப்பகத்தின் உரிமையாளர்கள், ஊழியர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. தியோரா மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் இருந்து தப்பி வந்த சிறுமி ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். அப்போது, அந்தக் காப்பத்தில் உள்ள சிறுமிகள் முறைகேடான வகையில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இரவுதோறும் வாகனம் ஒன்று வந்து சிறுமிகளை ஏற்றிச் செல்வதாகவும், பின்னர் அதிகாலையில் திரும்பி வந்து விட்டுச் சென்றதாகவம் கூறினார். இதுமட்டுமின்றி அந்தச் சிறுமிகளை மிக மோசமாக நடத்துவதாகவும் அந்தச் சிறுமி கூறினார்.
இதையடுத்து அந்தக் காப்பத்தில் சோதனையிட்ட போலீஸார் 24 சிறுமிகளை மீட்டனர். அந்தக் காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். இந்தக் காப்பகத்தை மோகன் திரிபாதி, கிரிஜா திரிபாதி ஆகிய இருவர் நடந்து வருகின்றனர்.
அவர்களை போலீஸார் கைது செய்ததுடன், காப்பகத்துக்கும் சீல் வைத்துள்ளனர். அந்தக் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டு சிறுமிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தக் காப்பகத்துக்கு முன்பு அரசு நிதியுதவி அளித்து வந்த நிலையில், 2017-ம் ஆண்டு இந்த உதவி நிறுத்தப்பட்டுள்ளது. காப்பகம் குறித்து பல்வேறு நிதி தொடர்பான புகார்கள் வந்ததால் நிதியுதவி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்தக் காப்பகத்தை உரிமையாளர்கள் நடந்தி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.