21.10.2020
இடிகரை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 57). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தெய்வானை. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ராமகிருஷ்ணனின் தம்பி லட்சுமணன் (48). பிறவியிலேயே காது மற்றும் வாய்பேச முடியாது. இவருக்கு 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமணன் அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 4-ந் தேதி ராமகிருஷ்ணன் தனது தம்பி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டை ஏன் சுத்தம் செய்யாமல் இருக்கிறாய்? என்று சைகை மூலம் லட்சுமணனிடம் கேட்டு உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தனது அண்ணன் ராமகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்தார். பின்னர் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து மயக்கத்தில் இருந்து எழுந்த ராமகிருஷ்ணன் வழக்கம்போல் வேலையை பார்த்தார். ஆனால் 4 நாட்களுக்கு பிறகு அவருக்கு தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீரபாண்டி பிரிவு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று உள்ளார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கடந்த 16-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு தலைக்குள் ரத்தம் உறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தலையில் இரும்பு பெட்டி அடித்தாக அவரின் தம்பி லட்சுமணன் போலீசாரிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவரின் செயலில் சந்தேகம் அடைந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
அத்துடன் மாற்றுத்திறனாளிகளிடம் சைகை பாஷை பேசும் ஒருவர் வரவழைக்கப்பட்டு லட்சுமணனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது அண்ணனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் லட்சுமணனை கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே அண்ணனை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment