FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, April 19, 2022

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 20ந் தேதி நடக்கிறது

16.04.2022 மதுரை
மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் லெனின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை பிரிவு சார்பில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதான வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் வருகிற 20ந்தேதி நடைபெற உள்ளன.

போட்டியில் பங்கேற்போர் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. எந்த பிரிவானாலும் ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க வேண்டும். சக்கர நாற்காலி போட்டியில் பங்கேற்பவர்கள் சக்கர நாற்காலியுடன் வரவேண்டும்.

மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு போட்டிகளில் முதல் இடத்தை பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வேண்டும்.- போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

குழு விளையாட்டுப் போட்டிகளில் கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு (ஆண்கள், பெண்கள்) இறகுப்பந்து போட்டிகள் (ஒற்றையர் மற்றும் இரட்டையர் தலா 5 வீரர்கள்), மேஜைப்பந்து போட்டிகள் (தலா இருவர்), பார்வையற்றோர் (ஆண்கள், பெண்கள்) வாலிபால் போட்டிகள் (தலா 7 வீரர்கள்), மனநலம் பாதிக்கப்பட்டோர் (ஆண்கள், பெண்கள்) எறிபந்து போட்டிகள் (தலா 7வீரர்கள்), காது கேளாதோர் (ஆண்கள், பெண்கள்) கபடி போட்டிகள் (தலா 7 வீரர்கள்) பங்கேற்கலாம்.


 


மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

17.04.2022 திருவண்ணாமலை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் வயது வரம்பின்றி தனித்தனியாக நடைபெறும்.

இதில் மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் ஆகியவர்களை ஊக்குவிக்கும் வகையில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், எறிபந்து, கபடி போன்றவை குழு போட்டிகளாகவும், ஓட்டம், குண்டு எறிதல், நின்ற இடத்தில் தாண்டுதல், சக்கர நாற்காலி போன்றவை தடகள போட்டிகளாகவும் நடத்தப்பட உள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டை நகலினை கட்டாயமாக போட்டிகள் நடக்கும் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

அடையாள அட்டை இல்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது.

மேலும் கூடுதல் விவரங்களை பெற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.



ஏப். 26ல் மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள்


விருதுநகர்,:2021 - -22க்கான மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள் ஏப். 26ல் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பில்லை. மருத்துவ சான்று அல்லது மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று பெற்று வர வேண்டும். மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் பங்கேற்கும் வகையில் 50 மீ., 100 மீ., குண்டு எறிதல், தாண்டுதல் போட்டிகளும், குழு விளையாட்டு போட்டிகளான பாட்மிண்டன், கபாடி, எறிபந்து உள்ளிட்ட விளையாட்டுக்களில் பங்கேற்கலாம், பங்கேற்க விரும்புபவர்கள் ஏப். 26 காலை 8:00 மணிக்கு நேரில் வர வேண்டும், என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.


Tuesday, April 12, 2022

குஜராத்: பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை - காது கேளாத, வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்



09.04.2022  குஜராத் மாநிலத்தில் மாற்றுத் திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண், குஜராத் மாநிலம் மெஹ்சானாவில், தன் 5 வயது மகன், கணவனுடன் வசித்து வந்தார். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த பெண்ணை அந்த பகுதியில் வசித்து வந்த 4 பேரால் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதைப் பல முறை கணவனிடம் கூற முயன்றும் முடியாமல் தவித்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் தாயின் நிலையை அறிந்துகொண்ட 5 வயது சிறுவன் தன் தாயிக்கு நடக்கும் கொடுமையை தன் தந்தையிடம் கூறியுள்ளார். இதை அறிந்த அந்த 4 பேரும், ``உடனே ஊரை காலி செய்து மீண்டும் ராஜஸ்தான் சென்று விட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்" என அந்த குடும்பத்தை மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், உயிருக்குப் பயந்து அங்கிருந்து அந்த குடும்பம் மீண்டும் ராஜஸ்தான் வந்துவிட்டனர். அதன் பின்பு நடந்த சம்பவத்தை ஜீரோ எஃப் ஐ ஆர் விதியின்கீழ் அவரின் கணவர் ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறை, ``செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள பெண் நான்கு பேரால் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.


ஆப்ரிக்க கிராமம்: காது கேளாத ஜோடிகள் கரம் பிடிக்க தடை விதிக்கும் வழக்கம்




காணொளியைப் பாருங்கள்: (வீடியோ)

கானா நாட்டின் அக்கரா என்ற இடத்தில் உள்ளது அடமொரோப் கிராமம். அந்நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே இந்த கிராமம் இருந்தாலும் இங்கு ஒரு விஷயம் மட்டும் வித்தியாசமாக உள்ளது. அது என்ன? இந்த காணொளியைப் பாருங்கள்.

Saturday, April 9, 2022

Hearing Aid மூலம் முதன் முறையாக குரலைக் கேட்டு குதூகலிக்கும் குழந்தை...


பிறக்கும் போதே காது கேளாத குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தையின் நிலை மிகவும் பரிதாபமானது. பிறந்த குழந்தைக்கு காது கேட்கவில்லை என்றால், நாளடைவில் வாய் பேச முடியாமல் போய்விடும். இந்நிலையில் பிறந்ததில் இருந்தே காது கேளாமல் இருந்த குழந்தை ஹியரிங் எய்ட் மூலமாக முதன் முறையாக ஒலியை கேட்டு மகிழும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"ஜாக் முதல் முறையாக கேட்கிறார்" என்ற கேப்ஷன் உடன் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் போன் ‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) எனப்படும் செவிப்புலன் உதவி கருவியுடன் ஜாக் என்ற குழந்தை முதன் முறையாக இந்த உலகின் உன்னத ஒலிகளை கேட்டுள்ளது.

வீடியோவில், பெண்மணி ஒருவர் குழந்தை ஜாக்கை தனது கையில் வைத்துள்ளார், குழந்தையின் காதுக்குள் BAHA சாதனம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பேசும்போது, ​​​​ஜாக் தனது தலையை அசைப்பதன் மூலம் குரல்களுக்கு பதிலளிப்பது பதிவாகியுள்ளது. ஜாக்கிற்கு ஒரு காது கேளாமை பிரச்சனை உள்ளது. பொருளாதார ரீதியாக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு செவித்திறன் மட்டுமல்ல கண்பார்வை குறைபாடும் உள்ளது.

இப்போது இந்த வீடியோவை பார்ப்பது பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும், குழந்தை ஆரம்பத்தில் அடைந்த கஷ்டங்கள் அளவிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் குழந்தை செவித்திறன் மற்றும் பார்வை குறைப்பாடு கொண்டிருப்பதால் வளர்ச்சியில் மந்தமான நிலையில் இருந்துள்ளது.

‘ஆங்கர்டு ஹியரிங் எய்ட்’ ( BAHA) -யைப் பயன்படுத்துவது குழந்தைக்கு ஒரு தற்காலிக தீர்வு என்றும், காது மடல்களுக்கு மேல் பொருத்தப்படும் செவிப்புலன் கருவிகளை பொருத்துவதே அடுத்த இலக்கு என்றும், வீடியோ பகிரப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தை ஜாக்கின் உள் மற்றும் நடுத்தர காது பகுதிக்கு இடையில் செவித்திறன் பாதிப்பு உள்ளது. இதனால் அவர் கேட்கக்கூடிய சிறந்த செவிப்புலன் விருப்பத்தை தீர்மானிக்க கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரல்களைக் கேட்கும் போது குழந்தை ஜாக்கின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை பார்க்கும் போது, பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தும் அளவிற்கு உள்ளது. பிஞ்சு குழந்தை இத்தனை நாட்களாக எத்தனை துன்பங்களை தனக்கே அறியாமல் கடந்து வந்திருக்கும் என்பதை அந்த ஒற்றை புன்னகை நமக்கு உணர்த்துகிறது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை காணும் பலரும், குழந்தைக்காக மகிழ்ச்சி அடைவதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

“கடவுள் உங்களை அழகாக ஆசீர்வதிக்கட்டும்” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ‘தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஜாக் கேட்க முடிந்தது மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


தமிழகத்தில் அரசு வேலைக்காக காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,904 பேர் காத்திருப்பு..!



கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி வரை வேலை வாய்ப்புக்காக்காக பதிவு செய்தவர்களின் வயது வரையான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,88,359 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. இதில், 35,56,085 ஆண்களும், 40,32,046 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 228 பேர் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.

அதன்படி 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17,81,695 பேரும், 19 முதல் 23 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 16,14,582பேரும், 24 வயது முதல் 35 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் 28,60,359 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 13,20,337 பேர், 58 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 11,386 பேர் என தெரிவித்துள்ளது.

அதேபோல மாற்றுத்திறனாளி பதிவு செய்துள்ள விவரங்கள் வெளியிட்டுள்ளது. மொத்தமாக மாற்றுத்திறனாளிகள் வேலைக்காக 1,39,825 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், ஆண்கள் 92,779 பேரும், பெண்கள் 47,046 பேரும் பதிவு செய்துள்ளனர். கை, கால் குறைபாடுடையோர் மொத்தம் 1,08827 பதிவு செய்துள்ளனர். அதில், 71566 ஆண்களும், 37,261 பெண்களும் பதிவு செய்துள்ளனர். விழிப்புலனிழந்தோர் மொத்தம் 17,094 பேர் பதிவு செய்துள்ளனர்.

அதில், 11,776 ஆண்களும், 5,318 பெண்களும் பதிவு செய்துள்ளனர். காதுகேளாதோர், வாய் பேசாதோர் மொத்தம் 13,904 பேர் பதிவு செய்துள்ளனர். அதில், 9,437 ஆண்களும், 4,467 பேர் பெண்கள் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Oscars 2022:ஆஸ்கர் விழாவில் புது சாதனை படைத்த காது கேளாத நடிகர்

காது கேளாத நடிகரான ட்ராய் கோட்சுருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது


94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. அந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு கிடைத்தது. தனக்கு முதல் முறையாக ஆஸ்கர் கிடைத்த சந்தோஷத்தில் கண் கலங்கிவிட்டார் வில் ஸ்மித்.CODA படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ட்ராய் கோட்சுருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆஸ்கர் விருது பெற்ற இரண்டாவது காது கேளாத கலைஞர் ட்ராய். அதே சமயம் ஆஸ்கர் வென்ற முதல் காது கேளாத நடிகர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார்.

தன் படக்குழு மற்றும் குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்தார் ட்ராய். மேலும் காது கேளாதோர் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள், CODA சமூகத்திற்கு இந்த ஆஸ்கர் விருதை சமர்பிப்பதாக தெரிவித்தார்.
CODA படத்தில் ட்ராயுடன் சேர்ந்து நடித்த மார்லீ மார்டின் தான் ஆஸ்கர் விருது பெற்ற முதல் காது கேளாத கலைஞர் ஆவார். 1987ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விழாவில் Children of a Lesser God படத்திற்காக மார்லீக்கு விருது கிடைத்தது.

2021ம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்ற யூன் யூ யுங் ட்ராய்த்து விருது வழங்கினார். அரங்கில் இருந்த அனைவரும் சைகையில் பாராட்டினார்கள்.



மாற்றுத்திறனாளிகளுக்கு 20ல் விளையாட்டு போட்டி


06.04.2022 காஞ்சிபுரம் : மாற்றுத்திறனாளிகளுக்கு, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

இதில், ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் 20ம் தேதி காலை 9:00 மணி முதல் நடைபெற உள்ளது.தடகள போட்டியில், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், காது கேளாதோர் ஆகியோர் பங்கேற்பர்.குழு போட்டிகளாக, இறகு பந்து, மேசைப்பந்து, வாலிபால், எறிபந்து, கபடி போன்ற விளையாட்டுகளில் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் நபர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ அல்லது 74017 03481 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு



05.04.2022 மாமல்லபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் தமிழ்நாடு அரசு காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு, 1 முதல் 10ம் வகுப்பு வரை காது கேளாதோர், வாய் பேச முடியாத மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். நேற்று காலை மாற்றுத்திறனாளி மாணவர்கள், சுற்றுலா நகரமான மாமல்லபுரம் வந்தனர். அங்கு, புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவற்றை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தனர்.

மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகே தலசயன பெருமாள் கோயிலில், அரசின் அன்னதான திட்டம் மூலம் 50க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது. இதையொட்டி, கோயில் நிர்வாகம் சார்பில், காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்கள் வருகையொட்டி கூடுதலாக 50 பேருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து, உணவு வழங்கப்பட்டது. இதற்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை மதிய உணவு வழங்கிய கோயில் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.




காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்

05.04.2022 மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்க தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் கூட்டம் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு காது கேளாதோர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு காது கேளாத மகளிர் சங்க தலைவி காயத்ரி, பொதுச்செயலாளர் செல்வகுமாரி, பொதுக்குழு உறுப்பினர் ஷோபனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி ஆணையர் பாலு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காது கேளாத இளம் பெண்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பிரகாஷ், பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.