நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். திரைத்துறையை பொறுத்தவரை குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் அஜித் சமீபத்தில் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் கேரளா, பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி தேவஸ்வம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அஜித், பகவதி அம்மனை டாட்டூவாக நெஞ்சில் போட்டிருந்தர். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில், துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதனைத் தொடர்ந்து தற்போது திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் தல தல... என கூச்சலிட்டனர். அவர்களை சைகை மூலம் இது கோயில்.. அமைதியாக இருங்கள் என அமைதியாக்கினார். பின்பு அவரை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் செல்பி எடுக்க செல்போனை அஜித் முகம் முன்பு நீட்ட அவரை பார்த்த அஜித் அவரிடம் ஏதோ கேட்க அதற்கு அந்த ரசிகர் தன்னால் வாய் பேசவும் காது கேளவும் இயலாது என சொன்னதும் அவரின் போனை வாங்கிய அஜித் அவருடன் செல்ஃபி எடுத்து கொடுத்தார். இந்த செயல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.


No comments:
Post a Comment