 |
காது கேளாத, வாய் பேச முடியாத இளைஞர்கள் |
 |
விநாயகர் சிலை தயாரிக்கும் மாற்றுத் திறனாளிகள் |
26.08.2025
இயற்கை தங்களை உடல் அளவில் சோதித்திருந்தாலும், மனதளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறார்கள் இந்த காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர்கள்.கட்டாக், ஓடிசா: நான்கு இளைஞர்கள் விநாயகர் சிலை முன்பு சைகை மொழியில் பேசுகிறார்கள். சற்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறது? என்பதை யூகிக்க சற்று தாமதமாகலாம். ஆனால், அருகே சென்று அவர்களை உற்று நோக்கினால் மட்டுமே அவர்கள் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
யார் இவர்கள்? ஏன் அங்கே குழுமியிருக்கிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை அறிய அவர்களுடன் பயணத்தால் பல்வேறு ஆச்சரியமான செய்திகளை சுவாரசியமாக அவர்களது சைகை மொழியிலேயே கூறுகிறார்கள் அந்த இளைஞர்கள்.
இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், யாருடைய கொண்டாட்டத்திற்கும் சிறிதும் குறைவில்லாமல் இந்த காது கேட்காத, வாய் பேச முடியாத இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டி மகிழ்கின்றனர். பல தசாப்தங்களாக விநாயகர் சதுர்த்தி விழா கட்டாக் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக இந்த மாற்றுத்திறனாளிகள் இணைந்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
மேலும், சிலையை செதுக்குவது முதல் பூஜை, அலங்காரங்கள் மற்றும் பிரசாதம் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட அனைத்தையுமே இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்தே கவனிக்கிறார்கள்.
இது தொடர்பாக காது கேளாதவரும், கட்டாக் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவருமான கிருஷ்ணா நாயக் கூறும் போது, "கடந்த காலங்களில் எங்களுக்கு பிடித்த மாதிரி சிலைகள் வேண்டும் என்பதை, விநாயகர் சிலை தயாரிக்கும் சிற்பிகளுக்கு விளக்குவதே பெரிய சவாலாக இருந்தது. இந்த தொடர்பு தடைகளை எவ்வாறு நீக்க முடியும் என்பதை யோசித்தோம். ஏனென்றால், அவர்களால் சைகை மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் தவறாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எங்களுக்கு கொடுத்தார்கள்.
அதனால் நாங்களே சிலைகளை தயாரிக்க ஆரம்பித்தோம். எங்களில் சிலர் யூ டியூப் பார்த்து சிலைகளை உருவாக்கும் பயிற்சியை கற்றுக் கொண்டனர். விநாயகர் சிலை தயாரிப்புக்களை பொதுவாக இரண்டு மாதத்திற்கு முன்பே நாங்கள் ஆரம்பித்து விடுவோம். எனென்றால், பெரும்பாலானவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியில் உள்ளனர். இதனால், இந்த சிலை தயாரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அவர்களால் வேலை முடிந்து மாலை நேரம் அல்லது விடுமுறை நாள்களில் மட்டுமே வர முடியும்.
சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து இந்த சிலை தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள். தங்களுக்கு தேவையான களிமண், வைக்கோல், நிதி என அனைத்தையும் ஒன்றாக அமர்ந்து பேசி மிக எளிதாக நடைமுறைப்படுத்துகிறார்கள். மேலும், எங்கள் தேவைகளை கடைக்காரர்கள் புரியும் மொழியில் தெரிவிக்க வேண்டும். பொருட்கள் வாங்கப் போகும் போது ஆரம்பத்தில் சற்று சிரமம் இருந்தது. தற்போது எங்கள் தேவைகளை அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் கொண்டாட்டங்களில் உள்ளூர்வாசிகளும் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள்" என்றார்.
எங்கள் கொண்டாட்டங்கள் மற்றவர்களுக்கு அசாதாரணமாக தோன்றலாம். ஆனால், எங்களுக்கு அது மகிழ்ச்சியை தருகிறது. இந்த பூஜை எங்களுக்கானதாக உணர்கிறோம். அதனால், ஆர்வமுடன் பங்கேற்று இறைவன் அருள் பெறுகிறோம் என்கிறார் சங்கத்தின் செயலாளர் அபி மொஹந்தி.
இயற்கை உடல் அளவில் சோதித்திருந்தாலும், மனதளவில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இவர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.