24.10.2017
கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.அப்போது அவருடன் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், வட்டாட்சியர் அருள் உள்பட பலர் உடன் இருந்தனர். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், "தமிழக அரசு வருடந்தோறும் மாற்றுத்திறனுடைய சிறப்பு பிரிவினர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்திட அறிவுரை பெறப்பட்டதன் பேரில் கரூர் மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கை, கால் ஊனமுற்ற ஆண்கள்/பெண்களுக்கு இறகுப் பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியும், டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி, பார்வையற்ற ஆண்கள்/பெண்களுக்கு கையுந்து பந்துப் போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள்/பெண்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதோர் ஆண்கள்/பெண்களுக்கு கபடிப் போட்டியும் நடைபெறுகிறது.
தடகள போட்டியில் கை, கால் ஊனமுற்ற ஆண்கள்/பெண்கள் இருபாலருக்கும் 50 மீட்டர் ஓட்டம்,100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல்100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும், பார்வையற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் சாப்ட் பந்து எறியும் போட்டி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், சாப்ட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டி மற்றும் காது கேளாதோருக்கு 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் பங்கேற்க இருக்கிற அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment