தேசிய அளவில் உயரம் தாண்டுதல் மற்றும் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற, காது கேட்காத, வாய் பேச முடியாத வீரரான கார்த்திக்குக்கு, விகடன் செய்தி எதிரொலியாக அரசு உதவிகளும், தனியார் அறக்கட்டளை சார்பில் கல்விக்கான உதவிகளும் குவிகின்றன. இதனால், தேசிய சாம்பியனான கார்த்திக், சர்வதேச சாம்பியனாக அவதாரம் எடுக்க வழி கிடைத்திருக்கிறது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ள புஞ்சை தோட்டகுறிச்சியைச் சேர்ந்த சரவணன் என்வரின் மகன்தான் கார்த்திக். பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருக்கும் இவர், உயரம் தாண்டுதல், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், போல்வால்ட் உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர். இதில், உயரம் தாண்டுதல் மற்றும் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தேசிய காதுகேளாதோர் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்று, தேசிய சாம்பியனாக ஜொலிப்பவர்.
இத்துடன், கடந்த வருடம் துருக்கியில் நடந்த 23-வது சர்வதேச காது கேளாதோர் ஒலிம்பிக்கில் (டெஃப்) உயரம் தாண்டுதலில், 1.85 மீட்டர் தாண்டி 8-வது இடம் வந்தார். இவரின் தந்தை சரவணன், கூலிக்கு மாட்டுவண்டி ஓட்டுபவர். தாய் விஜயா, கீற்று முடைந்து விற்பனை செய்கிறார். கார்த்திக்கைத் தவிர இவர்களுக்கு ஒரு பெண்ணும் இருக்கிறார். அவருக்கும் காது சரிவர கேட்காது. இப்படி வீட்டில் வறுமை தாண்டவமாடினாலும், தகுந்த உபகரணங்களோ சத்தான உணவோ இல்லை என்றாலும், தளராத முயற்சியால் கார்த்திக் தேசிய சாம்பியன் ஆனார்.
கரூர் காகிதபுரத்தில் உள்ள காகித ஆலையில் பணிபுரியும் நடராஜ் என்பவர் மட்டும் இவருக்கு கோச்சிங் கொடுத்திருக்கிறார். ``முறையான கோச்சிங் இருந்திருந்தால், கார்த்திக் சர்வதேச அளவில் தங்கமே வென்றிருப்பார்" என்கிறார்கள் கார்த்திக்கின் நண்பர்கள்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, `தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் தங்கம் வெல்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் 1.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தேசிய சாம்பியன்களுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் பிரித்து வழங்கினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கார்த்திக்குக்கு வழங்கப்படவில்லை. கார்த்திக்கின் தந்தை அந்த உதவித்தொகை கேட்டபோது, `பொதுப்பிரிவுக்கு மட்டும்தான் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அந்தத் தகுதியில் கார்த்திக் வரலையே' என்று அதிகாரிகள் கைவிரித்தனர். சரவணன், தன் குடும்பத்தை முன்னேற்ற அந்தத் தொகையைக் கேட்கவில்லை; கார்த்திக்குக்கு நல்ல கோச் நியமித்து, தீவிரமாகப் பயிற்சி கொடுக்கத்தான் கேட்டார். கார்த்திக்கைப்போல் காது கேட்காத, நலிந்த விளையாட்டு வீரரின் குரல், அரசு இயந்திரத்தையா எட்டும் என்ற ஆதங்கத்தில், கார்த்திக்கின் நிலையை அவரது பெற்றோர் வழி பேட்டியாக நமது விகடன் இணையதளத்தில் கடந்த 20-ம் தேதி ``தேசிய சாம்பியன் ஆகிட்டதால கார்த்திக்கைப் புறக்கணிக்கிறீங்களா?" - அரசுக்கு, மாற்றுத்திறனாளி வீரரின் பெற்றோர் கேள்வி' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
கார்த்திக்கின் இந்த நிர்கதியான நிலையை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான ப.பாலகிருஷ்ணா ரெட்டியிடமும் விவரித்தோம். அவரோ, `டெஃப்புக்கு ஒலிம்பிக் இருக்கா?' என்று கேட்டு, நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இருந்தாலும், கார்த்திக்கைப் பற்றிய விவரங்களை தனது மெயில் ஐ.டி-க்கு அனுப்பிவைக்கும்படி அமைச்சர் சொன்னார். நாமும் அனுப்பிவைத்தோம். இந்தத் தகவல்களை எல்லாம் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.
கட்டுரை வெளிவந்து பரபரப்பானது. அமைச்சர், நாம் அனுப்பிய தகவல்களைப் பார்த்தாரா என்பதுகூட தெரியவில்லை. ஆனால், இந்தக் கட்டுரை கரூர்வாசிகள் பலரின் மனதைக் கரைக்க, கார்த்திக்கை அவரது இல்லம் தேடி போய்ப் பார்த்து வாழ்த்தியதோடு, தங்களால் இயன்ற பண உதவியைச் செய்தனர். இதற்கிடையில், இந்தக் கட்டுரையைப் படித்த கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், கார்த்திக்குக்கு உதவ நினைத்தார். கரூர் அட்லஸ் திரையரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு கார்த்திக்கை அவரின் பெற்றோரோடு வரவழைத்தார். அங்கு கார்த்திக்குக்கு சால்வை அணிவித்து ``வறுமை நிலையிலும் இந்த மாணவன் செய்ததுதான் உலக சாதனை. இவர் எல்லோருக்குமான முன்மாதிரி'' என்று பாராட்டினார். இத்துடன் ``மாவட்ட விளையாட்டு மையத்தில் பேசி, கார்த்திக்குக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி, அரசு சார்பில் கார்த்திக்குக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனை உதவிகளையும் செய்வோம்'' என கார்த்திக்கின் பெற்றோரிடம் உறுதியளித்தார்.
இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரூரின் பிரபல தொழிலதிபர்களும், கொங்கு கல்வி அறக்கட்டளைச் சேர்ந்தவர்களுமான அட்லஸ் நாச்சிமுத்துவும், `கொங்கு' சிவக்குமாரும், கார்த்திக்குக்குப் பல்வேறு உதவிகள் செய்வதாக உறுதியளித்தனர். ``கொங்கு கல்லூரியில் கார்த்திக் விரும்பும் கோர்ஸில் வரும் கல்வி ஆண்டிலேயே சேர்த்து, படிப்பு முடியும் வரை ஆகும் செலவை அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும்'' என்று இருவரும் கூறினர். கார்த்திக்குக்கு நிரந்தர கோச்சை நியமிக்க, தாங்களும் இன்னும் சில ஸ்பான்சர்களும் சேர்ந்து நிதியுதவி அளிக்கவிருப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர். ``இந்த உதவிகள் போதுமா, இன்னும் உதவிகள் வேண்டுமா?" என்று கேட்க, கார்த்திக்கின் பெற்றோர், ``இந்த உதவிகளே போதும். உங்களை காலம் உள்ள வரை மறக்க மாட்டோம்" என்று கண்கலங்கினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசியபோது...
``தேசிய சாம்பியன் ஆகியும் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தத்தளித்த கார்த்திக்கின் நிலை, ஒருகணம் என்னைக் கலங்கவைத்துவிட்டது. `உண்மையில் இவருக்கு உரிய வசதிகளைச் செய்தால், இந்தியாவுக்குச் சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவிப்பார்' எனத் தோன்றியது. அதனால் கார்த்திகை அழைத்து கௌரவித்தேன். அத்துடன், மாவட்ட நிர்வாகம் மூலம் கார்த்திக்குக்கு என்னென்ன அரசு சார்ந்த உதவிகள் வழங்க முடியுமோ, அத்தனை உதவிகளையும் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம். தவிர, தொழிலதிபர்களும் அவருக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். நாங்கள் செய்வது உதவி அல்ல; உலக அளவிலான தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு கார்த்திக் செய்யவிருக்கும் கௌரவத்துக்கான ஊக்கம். இந்தச் செய்தியை எழுதிய விகடனுக்கு நன்றி" என்றார்.
நம்மிடம் பேசிய கார்த்திக்கின் தந்தையான சரவணன்,
``என் மகன் நிலையை யாரும் கண்டுக்கலை. தேசிய அளவுல ரெண்டு தங்கம் வாங்கியும், அதை யாரும் மதிக்கலைங்கிறதை நினைச்சப்போ, வெறுப்பா இருந்துச்சு. பேசாம இவன் வாங்கிய தங்கத்தை மத்திய அரசிடமே திருப்பிக் கொடுத்திடலாமான்னுகூட தோணுச்சு. நாங்க எல்லாரும் விரக்தியா இருந்த சமயத்துலதான் விகடன்ல இவனைப் பற்றி எழுதினாங்க. அதுக்கப்புறம் யார் யாரோ முகம் தெரியாதவங்க எல்லாம் வந்து இவனை வாழ்த்திட்டுப் போறாங்க. மாவட்ட கலெக்டரும் எங்களை அழைச்சுட்டு போய் பாராட்டியதோடு, வேண்டிய உதவிகளையும் செய்றதா சொல்லி இருக்கார். கொங்கு கல்வி அறக்கட்டளை சார்பா இவனுக்கு உதவி செய்றதாவும் சொல்லி இருக்காங்க. விகடன், மாவட்ட ஆட்சித்தலைவர், கொங்கு கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தினர் இவங்களை எங்க காலத்துக்கும் மறக்க மாட்டோம். இந்த உதவிக்குப் பரிகாரமா, கார்த்திக்கை சர்வதேச சாம்பியனா ஆக்கியே தீருவோம்!" என்று முடித்தார் கண்கள் பனிக்க!
No comments:
Post a Comment