20.10.2019
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பிறவி காது கேளாத 50 குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்தில் பிறவி காது கேளாத குழந்தைகளுக்கு நத்தைச்சுருள் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 50 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நேற்று 50 வது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதையொட்டி சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு டீன் குழந்தைவேலு தலைமை வகித்தார். இ.என்.டி., துறைத்தலைவர் டாக்டர் நாகசுப்ரமணியன் வரவேற்றார். மெட்ராஸ் இ.என்.டி., ஆராய்ச்சி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், உதவிப்பேராசிரியர் யோகநாத், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷீலா, பேராசிரியர் அழகு வடிவேல் நிலைய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் மீனா, டாக்டர் மிதின் குமார் பங்கேற்றனர்.50 அறுவை சிகிச்சையின் போது சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
டீன் குழந்தைவேலு கூறியதாவது: தமிழகத்திலேயே குறைந்த வயதாக, ஒரு வயது 7 நாட்கள் கொண்ட குழந்தைக்கு இங்கு தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கு பிறவி செவிதிறன் குறைபாடு குழந்தைகளை கண்டறிய நவீன பரிசோதனை கருவிகளும், அதற்கான சிறப்பு அறையும் உள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒன்றரை வருடம் சிறப்பு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக இங்கு தான் இச்சிகிச்சை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது, என்றார். தொடர்ந்து 50 வது அறுவை சிகிச்சை நினைவாக கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.