25.06.2013
ஊட்டி:ஊட்டி அரசு காதுகேளாதோர் உயர்நிலைப் பள்ளி, "மூடுவிழா' காண தயாராகி வருகிறது.
ஊட்டியில், கடந்த 1975ல், அரசு காது கேளாதோர் ஆரம்பப்பள்ளி துவங்கியது. விடுதியுடன் கூடிய இப்பள்ளியில், நீலகிரி உட்பட, பிற மாவட்டங்களை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியர் பயின்று வந்தனர். சைகை மொழி உட்பட பிரத்யேக பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. கல்வி துறை கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளி, கடந்த 1984ல், சமூக நலத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
வளர்ச்சியும், வீழ்ச்சியும்::
இப்பள்ளி கடந்த 1996ல், உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது; 130 குழந்தைகள் படித்து வந்தனர். நாளடைவில், மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, நடப்பாண்டு 29 பேர் மட்டுமே உள்ளனர். பள்ளியில், மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால், இங்குள்ள 3 வகுப்பறைகள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக பயன்பாட் டுக்கு வழங்கப்பட்டுவிட்டது. பெரிய அறையில் இருந்த ஆய்வுக் கூடம், மிகச் சிறிய அறைக்கு மாற்றப்பட்டுள்ளது. தவிர, இப்பள்ளியை ஈரோடு அரசு காதுகேளா தோர் பள்ளியோடு இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது, என கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் குமுறல்::
சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "மாவட்டத்தில் வாய் பேச முடியாதோர் 119, காது கேளாதோர் 89 பேர் உள்ளனர் என, எஸ்.எஸ்.ஏ., கூறுகிறது. வாய் அசைவு, மனநிலை அறிந்து, கல்வி போதித்தால் மட்டுமே, வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரின் மனதில் பாடங்களை புரிய வைக்க முடியும். மாறாக, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய முறையில் பாடங்கள் போதிக்கப்படுவதில்லை. மாறாக, 8ம் வகுப்பு வரை, அத்தகைய மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகங்கள் "பாஸ்' செய்து விடுகின்றன. 9ம் வகுப்பு வந்தவுடன், அரசு காது கேளாதோர் சிறப்பு பள்ளிக்கு அனுப்பி விடுகின்றன. இதனால், சிறப்பு பயிற்சி உபரகணம் மூலம் அவர்களுக்கு பாடங்களை புரிய வைக்க சிரமப்பட வேண்டியுள்ளது' என்றனர்.
ஏன் இந்த முரண்பாடு::
பெயர் சொல்ல விரும்பாத மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) ஒருங்கிணைந்த கல்வி முறையின் கீழ், வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியர், சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி வாழாமல், நல்ல நிலையில் உள்ள மாணவ, மாணவியருடன் இணைந்து படிக்க வேண்டும், என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு, சாதாரண பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இதனால் தான், அரசு காதுகேளாதோர் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைகிறது. சாதாரண பள்ளிகளில், அவர்களுக்குரிய பிரத்யேக முறையில் கல்வி போதிக்கப்படுவதில்லை. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றால், அரசின் ஒருங்கிணைந்த கல்வி முறையை எதிர்ப்பதாக கூறி, எங்கள் மீது நடவ டிக்கை எடுத்து விடுவார்கள்' என்றார்.
பிரத்யேக ஆசிரியர்கள் இல்லை::
அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூறுகையில்,"சாதாரண பள்ளிகளில் படிக்கும், வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்க, சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. மாறாக, அத்தகைய மாணவர்களுக்கு எவ்வாறு கல்வி போதிக்க வேண்டும் என்ற பயிற்சியை, எஸ்.எஸ்.ஏ.,வின் ஆசிரியப் பயிற்றுனர்கள் மூலம், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. அப்பயிற்சியை அடிப்படையாக வைத்து தான் சாதாரண பள்ளி ஆசிரியர்கள் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியருக்கு கல்வி போதிக்கின்றனர்' என்றனர்.
கல்வி கொள்கையில் உள்ள இத்தகைய முரண்பாடுகளால், அரசு காது கேளாதோர் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைய துவங்கியுள்ளது. இதில் உள்ள குறைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு காதுகேளாதோர் பள்ளியை காக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Thanks to Dinamalar.
No comments:
Post a Comment