16.12.2017
சென்னை, சென்னையில் செயல்படும், தனியார் காப்பகத்தின் உதவியால், உறவினர்களை பிரிந்து தவித்த, வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள், 'ஆதார்' பதிவு தகவலின் அடிப்படையில், மீண்டும் வீடு திரும்பினர்.சென்னை, நுங்கம்பாக்கத்தில், மாற்றுத்திறனாளி பெண்களுக்கான காப்பகம் செயல்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன், நகரின் வெவ்வேறு பகுதி களில், ஆதரவின்றி சுற்றித் திரிந்த, வாய் பேச முடியாத, காது கேளாத பெண்கள் மூவரை, இந்த காப்பகம் அரவணைத்தது.தங்களை பற்றிய தகவல்களையோ, வீட்டு முகவரி பற்றிய குறிப்பையோ, கூற இயலாத நிலையில் இருந்த அவர்களை, எப்படியாவது, அவர்களின் உறவினர்களுடன் இணைக்கும் முயற்சியில், காப்பக நிர்வாகிகள் செயல்பட்டனர். அவர்களை, ஆதார் பதிவு மையத்திற்கு அழைத்துச் சென்று, பதிவு செய்ய முயன்ற போது, அவர்கள் மூவரும், ஏற்கனவே, ஆதார் பதிவு செய்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, காப்பக நிர்வாகத்தின் சார்பில், ஆதார் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. அவர்கள் விடுத்த வேண்டு கோளை தொடர்ந்து, ஆதார் பதிவில் இடம் பெற்றுள்ள, மூவரின் விபரங்களும் பெறப்பட்டன. இதையடுத்து, போலீசார் உதவியுடன், மூவரின் உறவினர்களை தொடர்பு கொண்டு, அவர்களுடன் அனுப்பி வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த, வேங்கடலக் ஷம்மா, 45, அவரது மகளுடன் அனுப்பி வைக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, சிந்தலா ரஜிதா, 27, அவரது தாயுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.காப்பகத்தில் இருந்த மற்றொரு பெண், பார்வதி, 19, ஈரோட்டைச் சேர்ந்தவர் என, கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது தாயாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. எனினும், அவரின் தாயாருடன் செல்ல, பார்வதி மறுத்து விட்டார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள பார்வதி, பல முறை வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக, அவரது தாயார் தெரிவித்தார்.தன்னுடன் இருப்பதை விட, காப்பகத்தில், மகள் பார்வதிக்கு பாதுகாப்பு அதிகம் என, அவரது தாயார் கூறியதை தொடர்ந்து, பார்வதி, அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளார். மாதம் ஒரு முறை, தன் மகளை சந்திப்பதாக, அவர் உறுதியளித்து உள்ளார்.இது குறித்து, காப்பக இயக்குனர், டாக்டர் ஐஸ்வர்யா கூறியதாவது:காணாமல் போனவர்களை, ஆதார் பதிவின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், அவர்களின் உறவினர்களுடன் சேர்த்து வைத்த சம்பவங்கள், இதற்கு முன்னரும் நடந்துள்ளன.ஆனாலும், காது கேளாத, வாய் பேச முடியாத பெண்களை, அவர்களது உறவினர்களுடன் சேர்த்து வைத்துள்ளது, இதுவே முதன்முறை என, ஆதார் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment