25.05.2018
இந்துார்: பாக்.,கில் இருந்து, இந்தியா திரும்பிய, காது கேளாத, வாய் பேச முடியாத இளம் பெண், கீதாவை திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்த, 50 பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட, 25 பேரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி, வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.தன், 9 வயதில், பெற்றோரை பிரிந்து, ரயில் ஏறி, லாகூர் சென்ற, காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமியை, தன்னார்வலர் ஒருவர் தத்தெடுத்து, 'கீதா' என்று பெயரிட்டு வளர்த்தார்.மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்தியா வந்த கீதா, மத்திய வெளியுறவு துறை அமைச்சர், சுஷ்மா சுவராஜ் உதவியுடன், பெறோரை தேடி வருகிறார்.
தற்போது, 25 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, காது கேளாத, வாய் பேசாத சிறுமியருக்கான ஆதரவு இல்லத்தில் தங்கிஉள்ளார்.பெற்றோரை கண்டுபிடிக்க முடியாததால் மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார்.
இதுகுறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கீதாவை திருமணம் செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கீதாவை திருமணம் செய்ய, 50 பேர் விருப்பம் தெரிவித்தனர். அவர்களில், 25 பேரை, வெளியுறவு அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டோர் விபரங்களை, இந்துார் நகர நிர்வாகத்துக்கு அனுப்பிய வெளியுறவு அமைச்சகம், அவர்கள் அனைவரையும், கீதா சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளது. அவர்களில், தான் விரும்பும் ஆணுடன், கீதாவுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment