![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGcGg9cDgJVjhN92_Ozq03jaaJC1wOFx-IAhp0s85gZ6rfUx9I6znjRE2pyE6iMZ-jHFtHt3pkC6TO82uBxc1pgKre-SfRY5J1pk2qdm8o1xfyKXb-deL7tGFgiS5bxzpKI1EEMhWgysrVQ8B1rBpFs8nb2AiGmiQbp2GYpooJCDfrTLJOaA4iWtaY9DQ0/w640-h374/1349163.jpg)
02.02.2025 சென்னை: மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய முடியாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம், செவித்திறன் மற்றும் கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளால் டெல்லியில் நடத்தப்பட்டு வரும் எஸ்இடிபி தொண்டு நிறுவனம், சென்னை சேடனா அறக்கட்டளை மற்றும் வித்யாசாகர் நிறுவனம் சார்பில், செவித்திறன் - கண்பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 3-வது தேசிய மாநாடு சென்னை முட்டுக்காட்டில் நேற்று நடைபெற்றது.
மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். எஸ்இடிபி நிறுவனத்தின் இயக்குநர் சமீர் தாலே வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்களை குடியரசு துணைத் தலைவர் வழங்கி, அவர்களுடன் சைகை மொழியில் கலந்துரையாடினார்.
பின்னர் மாநாட்டில் அவர் பேசியதாவது: இன்றைக்கு மாற்றுத் திறனாளிகளுடன் இருப்பதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். செவித்திறன் மற்றும் கண்பார்வை குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். ஏராளமான திறன்களைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளால் இன்றியமையாத பங்களிப்பை தேசத்துக்கு வழங்க முடியும். அதற்கு அவர்களை கைப்பிடித்து தூக்கிவிட்டால் மட்டுமே போதும்.
மாற்றுத் திறனாளிகளின் திறன்களைக் கண்டறிந்து, அவர்களின் கனவுகளை நனவாக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இவற்றை நிறைவேற்ற பிரதமர் மோடி உறுதியுடன் இருக்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பும் அவசியம். அவர்களது பங்களிப்பு இல்லாமல் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான இலக்கை அடைய முடியாது. எனவே மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை சமுதாயத்தில் யாரும் ஒதுக்கிவிடக் கூடாது.
வாழ்வில் பல்வேறு இக்கட்டான சூழல்களை திறம்பட கையாளும் அவர்கள், பாரா ஒலிம்பிக்கிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வளர்ச்சிப்பாதையை உருவாக்கி, மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டங்களை வகுத்து வருகிறோம்.
இந்த வளர்ச்சிக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கும் அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தொடங்கப்பட்ட ‘அம்மாவின் பெயரில் ஒருமரம்’ என்ற திட்டத்தை முன்னிலைப்படுத்தி முட்டுக்காடு தேசிய நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகளை குடியரசு துணைத் தலைவர் மற்றும் அவரது மனைவி மருத்துவர் சுதேஷ் தன்கர் ஆகியோர் நட்டனர்.
இந்நிகழ்வில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங், எம்பிக்கள் திருச்சி சிவா, கே.லட்சுமணன், தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் நசிகேத ரவுத், துணைப் பதிவாளர் பி.காமராஜ், வித்யாசாகர் நிறுவனத்தின் இயக்குநர் பூனம் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment