Tuesday, February 4, 2025
அதானி வீட்டு திருமணம்: மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
04.02.2025 மும்பை: தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் திவா ஷா திருமணம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வழக்கமாக தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்ல திருமணம் என்றால் அதில் பல துறை பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்வில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் மட்டுமல்லாது உலக நாடுகளில் இருந்து முக்கிய நபர்கள் பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் இந்தியாவின் டாப் செல்வந்தர்களில் ஒருவராக உள்ள அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகன் ஜீத் அதானி மற்றும் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஷா திருமணத்திலும் பிரபலங்கள் அதிகம் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. எலான் மஸ்க் முதல் மன்னர் சார்லஸ் வரை இதில் பங்கேற்க உள்ளதாக ஜீத் அதானி திருமணம் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவின. மொத்தத்தில் பிரபலங்கள் சங்கமிக்கும் நிகழ்வாக அது இருக்கும் என சொல்லப்பட்டது.
“எங்கள் குடும்பத்தின் வளர்ச்சி சாமானிய தொழிலாள வர்க்கத்தை போன்றதாகும். ஜீத்தின் திருமணம் எளிமையான மற்றும் பாரம்பரிய முறைப்படி நடைபெறும்” என கடந்த மாதம் மகா கும்ப மேளாவில் பங்கேற்று கவுதம் அதானி தெரிவித்தார்.
இந்த சூழலில் தங்கள் திருமண விழாவில் பிரபலங்கள் மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஜீத் அதானி மற்றும் திவா ஷா அழைப்பு விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘மித்தி கஃபே’-வுக்கு (Mitti Cafe) நேரடியாக சென்று தங்களது திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment