21.09.2017
திருவண்ணாமலை: சான்று வழங்க, 6,000 ரூபாய் லஞ்சம் கேட்ட, வி.ஏ.ஓ., உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செங்கம் தாசில்தார் கார் முன் படுத்து, மாற்றுத் திறனாளி தர்ணாவில் ஈடுபட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், போயம்பள்ளி தண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி, 50; காது கேளாத மாற்றுத் திறனாளி. இவர், அரசு உதவித் தொகை பெற, சான்றுக்காக, கிராம, வி.ஏ.ஓ.,வின் உதவியாளர் குப்பன், 45, என்பவரை, ஓராண்டாக அணுகி வருகிறார்.
குப்பன், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என, ரவி கூறினார். இதனால், சான்று வழங்காமல் அலைக்கழித்தார். இந்நிலையில், செங்கம் அரசு பள்ளியில், உள்ளாட்சி தேர்தல் பணி குறித்த பயிற்சி முகாம், நேற்று நடந்தது. இதில், செங்கம் தாசில்தார் உதயகுமார் பங்கேற்றார். அப்போது, கிராம உதவியாளர் லஞ்சம் கேட்பது குறித்து, தாசில்தாரிடம் ரவி மனு அளித்தார். மனுவை வாங்க மறுத்த தாசில்தார், காரில் ஏறி புறப்பட தயாரானார். உடனே ரவி, தாசில்தார் காரின் முன் படுத்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த ஊழியர்கள், அவரை அப்புறப்படுத்தி, தாசில்தாரை அனுப்பி வைத்தனர்.
மனுவை தாசில்தார் வாங்க மறுத்த சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment