19.01.2019
''காது கேளாத குழந்தைகளுக்கான, 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளிலும், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது,'' என, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் பேசினார்.சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 'காக்ளியர்' சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கான, கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன.இதில், சிகிச்சை பெற்ற, 250 குழந்தைகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் பேசியதாவது:தமிழகத்தில், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில், காது கேட்காத, 3,000 குழந்தைகளுக்கு, 'காக்ளியர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை வசதி, 17 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.இந்த சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு, சிகிச்சைக்கு பின், கேட்பியல், பேச்சு, மொழி, பயிற்சி அளிக்கும் வசதிகளை அதிகப்படுத்தும் வகையில், சென்னை மருத்துவ கல்லுாரியில், அதற்கான பிரத்யேக பி.ஏ.எஸ்.எல்.பி., பட்டப்படிப்பில், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.இத்துறையில், பட்ட மேற்படிப்பும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 'காக்ளியர்' கருவி சிகிச்சை வசதி, மாவட்ட, தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும், செயல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.ராமச்சந்திரா மருத்துவமனையின், காது, மூக்கு, தொண்டை துறை பேராசிரியர், ரவிகுமார் பேசியதாவது:உலகளவில், மண்டை ஓட்டிற்குள், 'காக்ளியர்' கருவி போன்ற, மிக சிறிய கருவி பொருத்துவதற்கான ஆய்வு நடத்தப்படுகின்றன. ஆய்வுகள் வெற்றி அடையும் போது, அதன் தேவை அதிகமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment