மலேசியாவில் உள்ள பொது உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி (OKU) மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தங்குதடையின்றி கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான கல்வி முற்றிலும் இலவசம் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) இன்று நடைபெற்ற “தேசிய கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2026-2035” அறிமுக விழாவில் பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
பொதுப் பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் (Polytechnics) மற்றும் சமூகக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 3,000 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முழு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் கடுமையான ஏழ்மை நிலையில் உள்ள 5,800 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த இலவசக் கல்வித் திட்டம், தற்போது விரிவுபடுத்தப்பட்டு 10,000 ஏழை மாணவர்களுக்கு பிடிபிடிஎன் (PTPTN) மூலம் உதவி வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் அறைகளை மேம்படுத்தவும் புனரமைக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திட்டங்களை அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அவற்றைச் சரியாகச் செயல்படுத்துவதே முக்கியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
“இது வெறும் நினைவூட்டல் அல்ல, இது எனது கடுமையான எச்சரிக்கை. மார்ச் மாதம் முதல் இந்தத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மாதாந்தர அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். காகிதத்தில் மட்டும் உலகத் தரம் வாய்ந்த திட்டமாக இல்லாமல், மாணவர்களுக்கு அதன் பலன் நேரடியாகச் சென்றடைய வேண்டும்,” என்று அவர் சாடினார்.
இதே விழாவில் பேசிய பிரதமர், இந்த ஆண்டு முதல் அனைத்துப் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மலேசிய அரசியலமைப்பு (Federal Constitution) மற்றும் தேசிய வரலாறு (Malaysian History) ஆகிய பாடங்கள் கட்டாயமாக்கப்படும் என்றும், இவை முழுமையாக மலாய் மொழியிலேயே கற்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த அதிரடி அறிவிப்புகள் மலேசியக் கல்வித் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது, குறிப்பாகச் சமூகத்தின் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு இது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.


No comments:
Post a Comment