16.01.2026
புதுச்சேரி: மத்திய அரசின் ராஷ்டிரிய வயோ யோஜனா திட்டத்தின் சார்பில், 43 பேருக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டைப் பிரிவு ஏற்பாட்டின் மூலம் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராஷ்டிரிய வயோ யோஜனா மூலம் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகள் 43 பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், குறை தீர்வு அதிகாரி ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைமை மருத்துவ அதிகாரி ஸ்டாலின் சிவகுருநாதன் மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி அரசின் சுகாதார துறை கீழ் இயங்கும், தேசிய சுகாதார இயக்கம் காது கேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ், இதுவரை 150 பயனாளிகளுக்கு அதிநவீன காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிகப்பு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் காது கருவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது என, புதுச்சேரி மாநில திட்ட அலுவலர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் திட்டம், செயற்கை உறுப்பு மற்றும் எலும்பு மூட்டு ஆதரவு சாதனங்கள் தென்னிந்திய அலுவலர் கிரிதரி நாயக் குழுவினர் மூலம் உபகரணங்கள் பொருத்தப்பட்டது.

No comments:
Post a Comment