FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, July 23, 2019

உலக சாம்பியன் பட்டம்... அரசுப் பள்ளியில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவி ஜெர்லின் அனிகா சாதனை!




22.07.2019
அவருக்குக் காது கேட்காது; பேசவும் முடியாது. ஆனால், அவரைப் பற்றி இன்று உலகமே பேசுகிறது; அவரைப் பற்றியே பேச்சே விளையாட்டு உலகில் நிறைந்திருக்கிறது. ஆனபோதும் பெருமையை மனதில் மட்டுமே தாங்கி, கனிவோடு எல்லோரையும் பார்க்கிறார். வெற்றியடைந்து இந்திய நாட்டின் தேசியக் கொடியை உயர்த்தியவாறே சிரிக்கையில், அவரின் தந்தை கண்ணீர் வழிய அக்காட்சியைக் காண்கிறார். அந்த வெற்றியை, அவர் படிக்கும் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், உடன்படிக்கும் மாணவர்கள் தங்கள் வெற்றியாகக் கருதி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ஜெர்லின் அனிகாதான் அவர்.

ஜெர்லின் அனிகா, மதுரையைச் சேர்ந்த இவர் தற்போது தைவான் நாட்டில் நடந்த 'சர்வதேச காதுகேளாதோர் யூத் பேட்மின்டன்' போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபின்ஜா ரோசெண்டலை (Finja Rosendahl) இறுதிப் போட்டியில் எதிர்கொண்டார். முதல்நிலை வீராங்கனையான ஃபின்ஜா ரேசெண்டாலை 21-12, 21-13 செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியனானார் ஜெர்லின் அனிகா. இதுமட்டுமல்லாமல், இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார் இவர். வெற்றிக்கு எதுவுமே தடையில்லை என்று உணர்த்திய ஜெர்லின் அனிகாவைப் பற்றி, அவரின் அப்பா ஜெயரட்சகனிடம் கேட்டோம்.

"ஜெர்லினுக்கு பிறந்ததிலிருந்தே பேசவோ கேட்கவோ முடியாது. ஆனா, எல்லாத்தையுமே கூர்ந்து கவனிப்பா. நண்பர்கள் சில பேர் பேட்மின்டன் விளையாடுவாங்க. அவங்கள பார்க்கப் போகும்போது ஜெர்லினை அழைச்சிட்டுப் போவேன். அவங்க விளையாடறதைப் பார்த்து, இவளும் விளையாட ஆசைப்பட்டா. எட்டு வயசுல கோச் சரவணன் சார்கிட்ட சேர்த்துவிட்டேன். (இப்ப வரைக்கும் அவர்தான் அவளுக்கு கோச்) ஒரு வருஷம் முடியிறதுக்குள்ளேயே, 'ரொம்ப நல்லா விளையாடுறா... பெரிய போட்டிகள்ல நிச்சயம் விளையாடி ஜெயிப்பா'னு கோச் சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நடந்துட்டு இருக்கு.

ஜெர்லினை அஞ்சாம் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியிலேயும், எட்டாம் வகுப்பு வரைக்கும் கான்வெட்ன்ட்டிலும் படிக்க வெச்சேன். அதுக்குப் பிறகு, மதுரை மாநகராட்சி அவ்வை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்தோம். அந்தப் பள்ளி ஜெர்லினுக்கு ரொம்பவே உதவியா இருக்கு. காலையில அஞ்சு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் பிராக்ட்டிஸ் செய்வா. அப்புறம், மதியம் ஒரு மணி வரைக்கும் ஸ்கூல். பிறகு வீட்டுக்கு வந்து, மறுபடியும் மூணு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் பிராக்டிஸ்தான். இப்படியேதான் நாலைஞ்சு வருஷமா போகுது. ஒருநாள் கூட பிராக்டிஸூக்குப் போகாம இருக்க மாட்டா.

எந்தச் சத்தத்தையும் அனிகாவால கேட்க முடியாது. அதை அவளுக்கு ப்ளஸா மாத்திக்கிட்டா! எப்படின்னா, பிராக்டிஸ் பண்ணும்போது வேறெதிலும் கவனம் சிதறாம முழு ஈடுபாட்டோடு இருக்க முடியும்னு சொல்லுவா. போட்டி நடக்கும்போதுகூட, எப்படி ஜெயிப்பது என்பதைத் தவிர வேறெதிலும் கவனம் போகாது. மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள்ல வெற்றிகளைக் குவிக்க ஆரம்பிச்சதும், சர்வதேச போட்டிகளேயும் நிச்சயம் வெற்றி பெறும் நாளுக்காகக் காத்திருந்தோம். 2017-ஆம் ஆண்டு, துருக்கியில் நடைபெற்ற காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் தொடரில் விளையாடி, பேட்மின்டனில் ஐந்தாம் இடத்தைப் பிடிச்சா ஜெர்லின். போன வருஷம், ஆசிய பசிபிக் சர்வதேச பேட் மின்டன் போட்டியில், விளையாடிய ஜெர்லின் அனிகா இரண்டு வெள்ளியும் ஒரு வெண்கலப் பதக்கமும் வாங்கினப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

மாற்றுத்திறனாளிக்கான போட்டிகள்னா ஈஸியா ஜெயிக்கிற மாதிரி இருக்கும்னு பல பேர் நினைக்கிறாங்க. வழக்கமாக பொதுப் பிரிவில் பேட்மின்டனில் எவ்வளவு கஷ்டப்பட்டு ஜெயிப்பாங்களோ, அதைவிட, அதிக முயற்சி எடுத்தாத்தான் மாற்றுத்திறனாளி போட்டிகள்ல வெல்ல முடியும். தைபேயில நடந்த போட்டிக்கு, நானும் கோச் சரவணனும் ஜெர்லினோடு போயிருந்தோம். நாங்க எதிர்பார்த்தது போலவே ஜெர்லின் சாம்பியன் பட்டம் வாங்கிட்டா. ஒரு வரியில் இதைச் சொல்லிட்டாலும், போட்டி நடந்த அந்த நேரத்தை என்னால மறக்கவே முடியாது. டபுள்ஸ்ல, மிக்ஸ்டு டபுள்ஸ்லேயும் வெள்ளிப் பதக்கம் வாங்கினப்ப, எங்க சந்தோஷமும் டபுளாயிடுச்சு.

ஜெர்லினுக்கு தான் எவ்வளோ பெரிய வெற்றி அடைஞ்சிருக்கோம்னு தெரியல. விளக்கிச் சொன்னப்ப கூட, 'ஓ! அப்படியா!'னு சாதாரணமாகத்தான் ரியாக்ட் பண்ணினா. இந்தக் குணம் அவளோட சின்ன வயசுலேருந்தே இருக்கு. அதனாலதான் விளையாடுற போட்டியை மட்டும்தான் மனசுல நினைப்பா. இதுக்கு முன்னாடி ஜெயிச்சது, தோற்றது பத்தி நினைக்கிறது இல்ல.

இந்தப் போட்டிக்கு விளையாட ஜெர்லினுக்கான செலவுகள அரசாங்கம்தான் செஞ்சுது. ஆனா, கூட போன எனக்கும் கோச் சரவணனுக்குமான செலவுகள எங்க நண்பர்கள் மூலமாகவும், கடன் வாங்கிட்டுத்தான் போனோம். ஏன்னா, ஜெர்லின் விளையாடறப்ப கோச் சரவணன் கூட இருந்தா, அவளுக்குத் தன்னம்பிக்கை கிடைக்கும்னு நினைச்சேன். நான் சின்னச் சின்ன ஜாப் வொர்க் பண்ணிக்கொடுத்துட்டு இருக்கேன். பெரிய அளவுக்கு வருமானம் கிடையாது.

தமிழக முதல்வர், சட்டசபையில மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் போட்டிகள்ல ஜெயிச்சா, ஊக்கத்தொகை கொடுப்பதாக அறிவிச்சிருக்காங்க. அது ஜெர்லினுக்குக் கிடைச்சா பெரிய அளவு உதவியா இருக்கும். எதிர்காலத்துல அரசு வேலை கொடுக்கிறதா சொன்னால், அவ வாழ்க்கையைப் பத்தி எந்தப் பயமும் இல்லாம இருப்பேன்.அப்பா ஜெயரட்சகன்

ஜெர்லின் இன்னும் நிறைய போட்டிகள்ல விளையாட தயாராயிட்டு இருக்கா. அடுத்த ஒலிம்பிக்ல கலந்துகிட்டு, பதக்கம் ஜெயிச்சு, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்ல பெயர் வாங்கித்தருவான்னு உறுதியா நம்பறேன்" என்றவர் குரலில் அவ்வளவு நம்பிக்கை. அவரின் எண்ணம் நிறைவேறட்டும்.

No comments:

Post a Comment