18.07.2019
விக்கிரவாண்டி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாத மாற்றுத் திறனாளி சேமித்து வைத்த, பழைய ரூபாய் நோட்டுகள், அவரது இறுதிச் சடங்கிற்கு பயன்படாமல் போனது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, ராதாபுரம் சாம்பசிவம் ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 52; காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவரது மனைவி அஞ்சாலாட்சி, 48.இவர்களுக்கு, 19 - 16 வயதில், இரு மகள்கள், 10 வயதில் மகன் உள்ளனர். ராஜாங்கத்தின், 78 வயது தாயும், உடன் வசித்து வந்தார். ராஜாங்கத்தின் தாயும், இரண்டாவது மகளும், காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகள்.அரசு வழங்கிய மாற்றுத் திறனாளி ஓய்வூதியம் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் கிடைத்த பணத்தை, ராஜாங்கம், மனைவிக்கு கூட தெரியாமல், சேமித்து வந்துள்ளார்.தனக்குள்ள குறைபாட்டால், வெளியுலக நடப்பு தெரியாமல் இருந்து வந்த ராஜாங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, படுத்த படுக்கையாய் இருந்தார். மத்திய அரசு அறிவித்த, பண மதிப்பிழப்பு குறித்தும், தெரியாமல் இருந்துள்ளார்.தன் உடல்நிலை மோசமடைவதை உணர்ந்த ராஜாங்கம், சேமித்த பணத்தை, வீட்டின் அருகில் பூமியில் புதைத்து வைத்துள்ள இடத்தை, மனைவியிடம் நேற்று முன்தினம் கூறியுள்ளார்.புதைத்து வைத்த பணத்தை எடுத்து பார்த்த மனைவி அதிர்ந்து போனார். அப்பணம் முழுவதும் பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 500 ரூபாயில், 41ம்; 1,000 ரூபாயில், ஒன்பது என, மொத்தம், 29 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது.அன்று இரவு, 7:00 மணியளவில் ராஜாங்கம் இறந்தார். ஆதரவுக்கரம் நீட்ட யாருமின்றி, கணவர் சேர்த்து வைத்த பணத்தால், ஒன்றும் செய்ய முடியாத நிலையில், அஞ்சாலாட்சி தவித்துள்ளார்.இதையறிந்த ஊராட்சி செயலர் புத்தன், ஈமச் சடங்கு நிதியாக, 2,000 ரூபாய் வழங்கினார். அக்கம் பக்கத்தினர் பணம் கொடுத்து உதவியதை தொடர்ந்து, ராஜாங்கத்தின் இறுதிச் சடங்கு நடந்தது.
No comments:
Post a Comment