14.03.2017
சேலம்: தரவரிசை பட்டியல் வெளியிடாமல், நேர்முகத்தேர்வு நடத்தினால், மின்வாரிய பணி நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க பொது செயலர் நம்புராஜன், முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் மனு விவரம்: தமிழக மின்வாரியத்தில், 300 எலக்ட்ரிக்கல்; 50 சிவில்; 25 மெக்கானிக்கல் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு, 2016 ஜன., 31ல் நடந்தது. நேர்முகத்தேர்வு, 2017 மார்ச், 13ல் துவங்கி, 18 வரை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டப்படி, பணி நியமனத்தில், குறைந்தபட்சம், 11 இடங்களுக்கு பதிலாக, பத்து இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வுக்குழு வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலில், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்ஆப் மதிப்பெண் குறிப்பிடாமல் காலியாக விடப்பட்டுள்ளது. குறிப்பாக, நேர்முகத்தேர்வு நடப்பது குறித்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவின் பெயர் வாரியான மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. எனவே, எழுத்துத்தேர்வு விடைதொகுப்பை வெளியிட வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடாமல், நேர்முகத்தேர்வு நடத்துவது, முறைகேடுக்கு வழிவகுக்கும். அதற்கு வாய்ப்பளிக்காமல், பாரபட்சமின்றி மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். நேர்முகத்தேர்வில், தகுதியான தேர்வர் இல்லாதபட்சம், மீண்டும் சிறப்பு தேர்வு நடத்தி, மாற்றுத்திறனாளிகளை கொண்டு, அந்த இடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment