FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Tuesday, March 28, 2017

வெற்றி முகம்: நம்மைப் பேச வைப்பவர்கள்!

28.03.2017
பள்ளி சக ஆசிரியர்களுடன் சைகை மொழியில் பேசும் முருகசாமி
சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளை வெல்வது, தனியார் தொலைக்காட்சி நடத்தும் கலைநிகழ்ச்சிகளில் அசத்தியெடுப்பது, ஓவியம், புகைப்படம், கணினி பயிற்சி, ஆங்கிலப் பயிற்சி, சிற்பக் கலை போன்ற தனித்திறன்களை மேம்படுத்துவது, அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது, இயற்கை விவசாயம் குறித்த புரிதலைக் களத்தில் கற்றறிவது எனத் திருப்பூரில் காது கேளாதோர் பள்ளியின் பல்வேறு சாதனைகளைப் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இங்குள்ள குழந்தைகளால் பேச முடியாது. பள்ளியை நிறுவிய முருகசாமியாலும் பேச முடியாது. ஆனால், இன்றைக்கு நம்மையெல்லாம் அவர்களைப் பற்றி பேச வைத்துள்ளனர்!

ஓசையற்ற போராட்ட வாழ்க்கை


சமீபத்தில் கவின்கேர் நிறுவனம் காதுகேளாதருக்குச் சேவை செய்தமைக்காக விருது வழங்கி முருகசாமியை கவுரவித்தது. திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர். தாய் காளியம்மாளும் தந்தை குழந்தைசாமியும் விவசாயக் கூலிகள். வீட்டில் மூத்த மகன் முருகசாமி. சிறு பிராயத்தில் சக குழந்தைகளோடு விளையாடும்போது முருகசாமி வாய்பேச இயலாமலும் காது கேட்கும் திறனற்றும் இருப்பதைக் கவனித்தார் அவரது தாய். அதனால், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சேர்த்தார். அங்கு 8-ம் வகுப்புவரை சைகை மொழி படித்தார்.

அதன் பின்னர் அங்குக் காது கேளாத குழந்தைகள் படிக்க வசதி இல்லாததால் தோட்ட வேலை, விவசாயம், பின்னலாடை நிறுவனம் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். “20 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்தான் காதுகேளாதோர் பள்ளியைத் திருப்பூரில் நிறுவ முக்கியக் காரணம்” எனச் சைகை மூலமாகப் பேசத்தொடங்கினார் திருப்பூர் முருகசாமி.

மாற்றுத் திறனாளிகள், பின்னலாடை நிறுவனங்களில் வேலைசெய்தாலும், அவர்கள் என்ன வேலை செய்தார்கள் என்பதைக் கூடச் சொல்லமுடியாது. இதைப் பின்னலாடை நிறுவனத்தில் வேலைபார்த்த சிலர், தங்களுக்குச் சாதகமான அம்சமாகப் பார்த்தனர். அத்தகைய சூழலில் வேலைநேரத்தையும், செய்த வேலையையும் குறைவாக மதிப்பிட்டுச் சம்பளம் வழங்கியதுடன் நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதியத்தைத் திருடியதையும் பார்த்தார் முருகசாமி. கல்வி அறிவு கிடைத்திருந்தால் அவர்களது வாழ்வும் மாறியிருக்கும் என அப்போது அவருக்குத் தோன்றியது.

கல்வி மட்டுமே மாற்றம் தரும்

காது கேளாதோர் பள்ளி தொடங்க வட்டாட்சியர் உட்படப் பலரிடம் உதவியை நாடினார். பலரும் பணத்தை முன்னிறுத்தி அவருடைய முயற்சிகளை முடக்கினர். அவருடைய தாய் சிறுகச் சிறுக சேர்த்து வாங்கிவைத்திருந்த நிலத்தில் பள்ளி கட்டிக்கொள்ள அனுமதி பெற்றார். 1997-ல் திருப்பூர் முருகம்பாளையத்தில் காது கேளாதோர் பள்ளியை ஆரம்பித்தார். “ஆரம்ப நாட்களில் என் மனைவி ஜெயந்தியும் பள்ளி தொடங்க எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் கல்வியால் மட்டுமே மாற்றுத் திறனாளிகளிடம் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என நம்பினேன். அதை அவர்களுக்கும் புரியவைத்தேன். இன்றைக்கு அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. மனம் தளராத உழைப்பு எங்கள் பள்ளியை வெளியுலகத்துக்குத் தெரிய வைத்துள்ளது. இன்றைக்கு முருகம்பாளையம் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக என் மனைவி உள்ளார்” என்றார்.

முருகம்பாளையம் பள்ளியில் 7-ம் வகுப்புவரை படித்து முடித்த குழந்தைகள், அதன்பின் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே கோதபாளையத்தில் 2008-ல் பிளஸ் 2 வரை பள்ளி தொடங்கினார். இரண்டுமே உண்டு உறைவிடப்பள்ளிகள். இங்குப் படிக்கும் குழந்தைகள் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு, கரூர், தர்மபுரி, சேலம், மதுரை, தேனி, திருவண்ணாமலை, ஊட்டி எனப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து படிக்கிறார்கள். “கோதபாளையம் பள்ளியில் 230 குழந்தைகளும், முருகம்பாளையம் பள்ளியில் 110 குழந்தைகளும் தற்போது இலவசமாக எவ்விதக் கட்டணமின்றிப் படித்து வருகின்றனர்” என்றார்.
பிரபுதேவாவுடன் நடனம்…
சிறப்பு ஆசிரியர்களும் சிறந்த மாணவர்களும்

கட்டணம் செலுத்த முடியாத நிலையில் படிக்கும் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும்வரை இவர் உதவி வருகிறார். “வேலையாகச் செய்யாமல் எனக்குக் கிடைத்த வாய்ப்பாகவும், சேவையாகவும் இதைக் கருதுவதால் நன்கொடை வழங்கும் நண்பர்கள் உதவியுடன் பள்ளியை நடத்துகிறேன்” என்றார். இங்கு 25-க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் உரிய சைகை மொழியைக் குழந்தைகளுக்குப் பாடங்களைச் சொல்லித்தருகிறார்கள்.

இவருடைய பள்ளி மாணவர்களில் சர்வதேச அளவில் சதுரங்கப் போட்டிக்கு அம்சவேணி, நந்தினி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். தடகளப் போட்டி, வாலிபால் ஆகியவற்றில் தேசிய அளவில் பல பரிசுகளைப் பள்ளி வென்றெடுத்துள்ளது. அதேபோல் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 படிப்பிலும் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்று அசத்தி வருகின்றனர்.

“நடிகர் பிரபுதேவா எங்கள் பள்ளிக் குழந்தைகளின் நடனத்திறனை கண்டு வியந்து, அவர்களோடு தனியார் தொலைக்காட்சியில் இணைந்து நடனமாடினார். அரசு போட்டித் தேர்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தன்னம்பிக்கையுடன் பலர் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியில் படித்த குழந்தைகளான மகாலட்சுமி, நந்தினி, சந்தனமேரி ஆகியோர் இன்று சிறப்பு ஆசிரியராகி, பள்ளியிலேயே குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தருகிறார்கள்.

ஒரு குழந்தை எதில் ஆர்வமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்து பயிற்சி வழங்கு கிறோம். இன்றைக்கு அரசு மேல்நிலைப் பள்ளிகளில்கூட எங்கள் பள்ளியில் இருக்கும் அளவுக்கு விளையாட்டு வசதிகள் இருக்காது. சைகை மொழியில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லித்தருகிறோம். இந்தக் குழந்தைகளுக்கு பிளஸ் 2 வரை ஆங்கிலப்பாடம் கிடையாது. இதற்காக, பள்ளிப்படிப்பை முடித்த பின்பு 6 மாதக் காலம் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். இதனால் ரயில்வே, வங்கி, போட்டித் தேர்வுகள் எனப் பல விதமான பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வெற்றி பெறுகிறார்கள்” என மகிழ்ச்சி பொங்க விளக்குகிறார்.

மாலை நேரங்களில் பள்ளி முடிந்ததும் இந்தப் பள்ளிக் குழந்தைகள் குழுவாக அமர்ந்து சைகை மொழியில் தோழமையோடு உரையாடுகிறார்கள். பலர் திக்கி திணறிக் குழந்தையின் மழலையைப் போன்று பேச முயல்கிறார்கள். அவர்களுக்கு உரிய பேச்சுப் பயிற்சியையும் முருகசாமி வழங்குகிறார். இத்தனை விஷயங்களையும் நம்மிடம் சைகை மொழியில் விளக்கிய முருகசாமியின் பேட்டியை அங்குள்ள மேலாளர் சித்ராவும், பள்ளியில் பயிலும் சக ஆசிரியர்களும் நமக்குப் பூரிப்போடு விளக்கப் பள்ளி வளாகத்தில் மகிழ்ச்சிக்கான ஆரவாரம்!

No comments:

Post a Comment