சேலம்: சேலம், மாசிநாயக்கன்பட்டி பள்ளியில் செயல்பட்டு வரும் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு மையத்தில், ஆசிரியர்கள் இல்லாததால், கல்வி கற்பது பாதிப்பதாக கூறி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இயலாக்குழந்தைகளுக்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஒன்றியங்களிலும் சிறப்பு மையங்கள் அமைத்து, அதில் சிறப்பாசிரியர்கள் மூலம், மன வளர்ச்சி குன்றியோர், பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில், சேலம், மாசிநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சிறப்பு மையத்தில் படித்து வரும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சுற்றுவட்டாரத்திலுள்ள, 40 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் இந்த சிறப்பு மையத்தில் படித்து வந்தனர். நான்கு சிறப்பாசிரியர்கள் இவர்களுக்காக நியமிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அது இரண்டாக குறைந்து, தற்போது ஒரு ஆசிரியர் கூட வருவதில்லை. கேட்டால், பயிற்சி, மாற்றுப்பணி என பல்வேறு காரணங்கள் கூறுகின்றனர். இதனால், படிப்பில் நன்கு தேறிவந்த குழந்தைகள் கூட, தற்போது கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இம்மையத்தில் உடனடியாக போதுமான ஆசிரியர்களை நியமித்து, மாற்றுத்திறன் குழந்தைகள் கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment