நாம் அன்றாடம் கடந்து செல்லும் முக்கிய சாலைகளின் ஓரங்களில், வயிற்றுப் பசியை போக்குவதற்கும், அன்றாட வாழ்வை நகர்த்திச்செல்வதற்குத் தேவையான பொருளாதாரத்தை ஈட்டுவதற்கும் போராடும் பல எளியோரைச் சந்தித்திருப்போம். அம்மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பல்வேறு சவால்களைக் கொண்டது. அப்படி ஒரு மனிதரைத்தான் விழுப்புரம் நீதிமன்ற நுழைவு வாயில் அருகே கண்டோம். அழுக்கு சட்டையில், மெலிந்த தேகத்துடன் சாலையோரமாக அமர்ந்திருந்த அந்த சாமானிய மனிதரின் கைகள், தார்ச்சாலையில் ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருந்தது. வண்ண வண்ண சுண்ணக்கட்டிகள் கரைந்துசெல்ல, ஈசனின் திருவுருவம் உருப்பெற்று கொண்டிருந்தது.
அந்த ஓவியம் முழுமை பெற்றதும் அதன் கீழே எழுதப்பட்ட வாசகம் காண்போரின் மனங்களை கணக்கச் செய்திடும் வகையில் இருந்தது. தன்னுடைய குடும்பச் சூழ்நிலையைத் தெரிவித்துவிட்டு அதன் கீழே, 'உதவி செய்யுங்கள்' என எழுதியிருந்தார் அந்த நபர். அவரிடம் பேசுவதற்காக முயற்சித்தோம்.
தான், 'காது கேட்காத பேச இயலாத மாற்றுத்திறனாளி' என்பதை சைகைகள் மூலம் தெரிவித்த அந்த நபர், 'எழுத்துக்கள் மூலம் பதிலளிக்க முடியும்' எனக் குறிப்பிட்டார். அவரைப் பற்றி அறிந்து கொள்ள எழுத்துக்கள் மூலமாகவும், சைகைகள் மூலமாகவும் பேசத் தொடங்கினோம். "என்னுடைய பெயர் மணிகண்டன். எனக்கு இப்போது 41 வயதாகிறது. நான் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மாலைக்கண்டான் கிராமத்தை சேர்ந்தவன். எங்க வீட்டில் நான் ஒரே பையன் தான், எங்க அப்பா, அம்மா கூலி வேலைக்குப் போய் தான் என்னை வளர்த்தாங்க. அப்பா இறந்துவிட்டார், அம்மா (கல்யாணி) மட்டும் தான் இருக்காங்க.
எனக்கு சின்ன வயசிலிருந்தே காது கேட்காது, வாய் பேச முடியாது. ஓவியம் வரைவது என்றால் மட்டும் அதிக ஆர்வம். மானாமதுரையில் இருக்கின்ற பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். எனக்குத் திருமணமாகி ஒரு பையன், ஒரு பெண் குழந்தை இருக்காங்க. என்னுடைய மனைவி ரீட்டாவுக்கும் என்னைப் போலத்தான் காது கேட்காது, வாய் பேச முடியாது. என்னுடைய பையனுக்கு 9 வயதாகிறது, பெண்ணுக்கு 3 வயதாகிறது. என் பையன் நன்றாக இருப்பான், அவனால் பேசவும், கேட்கவும் முடியும்." என்றவரின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
தொடர்ந்து பதிலளித்தவர், "என் பெண்ணுக்கு மட்டும் தான் கண் பார்வை கொஞ்சம் குறைவாக இருக்கும். ஆனால் அவளாலும் பேசவும் முடியும், கேட்கவும் முடியும். எனக்கு கருத்து தெரிந்து 30 வருடங்களாக படம் வரைந்து வருகிறேன். எந்த படம் ஆனாலும் நல்லா வரைவேன். முன்பெல்லாம் சுவர் ஓவியம் வரைந்து வந்தேன். காலப்போக்கில் யாரும் அப்படி வரைவதற்கு கூப்பிடுவதில்லை, குடும்பத்தில் மிகவும் வறுமையான சூழல் வந்தது. அதனால் கடந்த சில வருடங்களாகத்தான் இப்படி சாலைகளில் ஓவியம் வரைந்து பிழைத்து வருகிறேன். நல்ல மனிதர்கள் சிலர், நான் சாலையோரங்களில் வரையும் ஓவியங்களையும் பார்த்துவிட்டு கொடுக்கின்ற ஐந்து, பத்து ரூபாய் காசுகளைக்கொண்டுதான் எங்களின் வாழ்க்கை செல்கிறது. இப்போ சிவன், ஐயப்பன், அம்மன், கிறிஸ்து, ஆஞ்சநேயர், கிருஷ்ணர் போன்ற பல சாமிகளின் ஓவியங்களை வரைகின்றேன்.
சீசனுக்கு ஏற்றதுபோல மக்கள் அதிகம் வரும் திருச்செந்தூர், விழுப்புரம், பழனி, திருச்சி, திருநெல்வேலி போன்ற பல பகுதிகளுக்கும் சென்று இதேபோல் ஓவியம் வரைவேன். ஒரு பகுதிக்குச் செல்கிறேன் என்றால்... அங்கு ஐந்து நாள்கள் வரை தங்கி, இது போன்று ஓவியம் வரைவேன். அதன்பின், குடும்பத்தைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துவிடுவேன்.
No comments:
Post a Comment