FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 3, 2025

கஞ்சா போதையில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது




03.12.2025
ஆடுகோடி: பெங்களூரில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தவரை அப்பகுதியினர் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெங்களூரு, ஆடுகோடி எம்.ஆர்., நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு பேசவும் முடியாது; நடக்கவும் முடியாது. 9ம் தேதி இளம்பெண்ணின் பெற்றோர், மகளை வீட்டில் விட்டு விட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு சென்றிருந்தனர்.

காலை 11:00 மணியளவில் கஞ்சா போதையில் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ், 28, கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில், இளம்பெண்ணின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை பல முறை தட்டியும் திறக்காததால், கதவை காலால் எட்டி உதைத்து திறந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவரது மகள், நிர்வாணமாக கீழே விழுந்திருந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவின் பின்புறம் விக்னேஷ், தன் உடைகளை அணிந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவர் கூச்சலிட்டார்.

இதனால் தப்பி ஓடிய விக்னேசை, அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து, கால்களை கட்டினர். பின், ஆடுகோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய விக்னேஷ் முயன்றது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தற்போது விக்னேஷ், நீதிமன்ற காவலில் உள்ளார்.



பார் கவுன்சில் தேர்தலில் மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு கட்டண சலுகை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு



03.12.2025
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி 40 சதவிகிதத்திற்கும் குறைவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஓரிடத்தை ஒதுக்கவும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தல் கட்டணமாக 1,25,000 ரூபாய் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அல்லது சலுகை அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.எம். வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.கௌதமன், வழக்கறிஞர் எஸ்.தீபிகா ஆகியோர், தேர்தலை தாமதப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ தங்கள் நோக்கம் இல்லை என்றும், இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும், நாட்கள் குறைவாக உள்ளதால் வருகிற தேர்தலில் தங்கள் கோரிக்கைகள் தேர்தல் குழுவால் கருத்தில் கொள்ள முடியாமல் போனாலும் எதிர்கால தேர்தல்களிலாவது இடஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது பார் கவுன்சில் தரப்பில், தேர்தல் நடைமுறைகளை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்ச நீதிமன்றம், அதை கன்காணிக்க இமாச்சலப் பிரதேசம் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், பார் கவுன்சில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதால் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.



மாற்றுத்திறனாளிகள் நம்மை விட பலசாலியாக உள்ளனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி


03.12.2025
சென்னை கிண்டியில் உள்ள லோக்பவனில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றி வரும் அறக்கட்டளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிக் கவுரவித்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகள் தம்மை விடப் பலசாலியாக உள்ளதாகவும், அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தம்மை போல் சக மனிதர்கள்தான் என்றும், அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி லோக் பவன் என்று அறிவித்த முதல் நிகழ்ச்சியாக இது இருப்பதாகவும் ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



டிசம்பர் 3: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்- மு.க.ஸ்டாலின் வாழ்த்து



03.12.2025 சென்னை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவர்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் "Fostering Disability inclusive societies for advancing social progress". அதாவது "மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்" என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற நவீன உதவி உபகரணங்களை தன்னிறைவு எய்தும் வகையில் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் பிறரைச் சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத்திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.