திருநெல்வேலி, 27 December 2013
திருநெல்வேலி மாவட்டத்தில் 2013-14ஆம் நிதியாண்டில் 163 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவத்தார்.
பாளையங்கோட்டை பிளாரன்ஸ் சுவேன்சன் காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அவர் பேசியது:
மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில், நிகழாண்டு மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 20,202 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 47,872 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 74 பேருக்கும், பசுமை வீடுகள் திட்டத்தில் 89 பேருக்கும் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 26 பேருக்கு திருமண உதவித் தொகையாக ரூ. 8.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சிக் கழகத்தின் மூலம் ரூ. 34.91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 36 பேரூராட்சிகளில் 47 இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 23 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் எண்ணற்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளும் சகமனிதர்களைப் போல சமூகத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இவற்றை அவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில், 12 பேருக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், 17 பேருக்கு செயற்கை உபகரணங்களும் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
விழாவில், பள்ளித் தாளாளர் கே.பி.கே. செல்வராஜ், செஞ்சிலுவை சங்க மாநில துணைத் தலைவர் டி.ஏ. பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் ஜான்சன், பார்வையற்றோர் பள்ளி முதல்வர் கிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Thanks to
No comments:
Post a Comment