தமிழகத்தில் உள்ள மொத்த
மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 18 இலட்சத்திலிருந்து 22 இலட்சம்
(18 இலட்சம் 2001 ஆண்டு கணக்கெடுப்பு. அரசு புள்ளி விபரம்) ஐக்கியநாடுகளின்
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சாசனத்தில் இந்தியா கைச்சாத்திட்டு மூன்று
ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. (Ratification in UNCRPD). எவ்விதத்திலும்
எவ்வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்குதலோ, வேறுபாடு காட்டுதலோ
கூடாது; சம உரிமை, சம வாய்ப்பு, சமமான பங்கேற்பு என்பது அனைத்து
மட்டத்திலும் இருக்க வேண்டும் என்பதை இந்த உரிமை சாசனம் தெளிவாக,
ஆணித்தரமாக உணர்த்துகிறது. இதனையே மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டுச்
சட்டமும் கூறுகிறது. (Persons with Disabilities Act 1995).
ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில்(2011)
தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்களுக்கான விதிமுறையில்
"செவிட்டு ஊமைகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது' என்ற விதியை முக்கியமான
விதிகளில் மூன்றாவது விதியாக வைத்திருக்கின்றது. இந்திய அரசால் இயற்றப்பட்ட
மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டு சட்டம் தமிழக அரசிற்கு
பொருந்தாதா? இப்பிரச்னையை ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை?
மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள்
இருந்தும் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன? அரசியல் கட்சிகள் ஏன்
இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன?
1. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற
மக்களவைத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல்
அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கென கிட்டத்தட்ட 13 பக்கங்களை
ஒதுக்கியுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிட ஒரு
மாற்றுத்திறனாளிக்குக் கூட வாய்ப்பளித்ததாகத் தெரியவில்லை.
2) கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக முதல்வராய்
இருந்த திரு.கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகள்
பாதுகாக்கப்படும். (3/3/2010 திருச்சி பொதுக் கூட்டம்) சட்டமன்ற
பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு பெற்றுத்
தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலிலோ,
தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலோ எந்த மாற்றுத்திறனாளிக்கும்
வாய்ப்பளித்தாகத் தெரியவில்லை.
3) மாற்றுத்திறனாளிகளில் 70லிருந்து 80
சதவிகிதத்தினர் தலித்களாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும்
இருக்கிறார்கள் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சிகளாக தங்களை
அடையாளப்படுத்துபவர்கள் உணர்வார்களா? மாற்றுத்திறனாளிகள் பற்றிய அக்கறை
உண்டா?
4) அன்னிய நாடுகளில் அடிமைப்பட்டுக்
கிடக்கும் தமிழர்களின் விடுதலை பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள், சொந்த
நாட்டில் அடிமைகளைவிட மிகவும் கீழாக நடத்தப்பட்டு அனைத்து உரிமைகளும்
மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றி என்ன கருத்து கொண்டுள்ளன?
- சூர்ய.நாகப்பன்
No comments:
Post a Comment