பார்க்கவும் கேட்கவும் இயலாத ஹெலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவரும் தலைசிறந்த ஆசிரியருமான ஆனி சலிவன் ( Anne Sullivan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
* மசாசூசெட்ஸ் மாநிலத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த (1866) ஜொஹான்னா மான்ஸ்ஃபீல்ட் சலிவன், ஆனி என்று அழைக்கப்பட்டார். பெற்றோர் கல்வியறிவு இல்லாதவர்கள். இவருக்கு எட்டு வயதாக இருந்தபோது டிராக்கோமா என்ற கண் நோயால் பீடிக்கப்பட்டு கண் பார்வை போய்விட்டது.
* அம்மாவும் அதே வருடத்தில் இறந்தார். குடிகார அப்பாவோ தன்னால் இரண்டு குழந்தைகளையும் நெருக்கடி மிகுந்த ஒரு இலவச விடுதியில் சேர்த்துவிட்டார். அங்கு போய்ச் சேர்ந்த மூன்றே மாதங்களில் இவளது தம்பி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான்.
* பார்வையை இழந்ததால் எழுதப் படிக்கவோ அல்லது வேறு திறன்களையோ கற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த இடத்தைப் பார்வையிட வந்த ஒரு அதிகாரி அவளை பாஸ்டனில் உள்ள பெர்கின்சன் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்துவிட்டார்.
* 1880-ல் சலிவன் தன் படிப்பைத் தொடங்கினார். படிப்பில் கவனம் செலுத்தி விரைவில் நல்ல முன்னேற்றம் கண்டார். அங்கு பயின்று முதன் முதலாகப் பட்டம் பெற்ற லாரா பிரிட்ஜ்மான் என்ற கண் பார்வையற்ற, காது கேளாத பெண்மணியிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார்.
* அங்கிருந்த சமயத்தில் இவரது கண்ணில் தொடர்ச்சியாகப் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இவை குறிப்பிடத்தக்க வகையில் இவரது பார்வையை மீட்டன. 20 வயதில் பட்டம் பெற்றார். கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். 1887-ல் சலிவன் அலபாமாவில் இருந்த அவர்கள் வீட்டுக்குச் சென்றார்.
* ஹெலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் ஹெலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார்.
* குழந்தைக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் water என்று மீண்டும் மீண்டும் எழுதினார். அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது.
* ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் பிரைய்லி முறையையும் கற்றுக்கொடுத்தார். 1888-ல் ஹெலனை பாஸ்டனுக்கு அழைத்துச் சென்று பெர்கின்சன் பள்ளியில் சேர்த்து அவருடனே தங்கி, கற்பித்துவந்தார்.
* ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரசித்தம்.
* சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 70-வது வயதில் காலமானார்.
No comments:
Post a Comment