திருச்சி மாவட்டம் மணிகண்டத்தில் தேங்காய் பறிக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கியதில் இரண்டு மாற்றுத்திறனாளி தொழிற்பயிற்சி மாணவர்கள் இன்று இரவு உயிரிழந்தனர்.
வேலூரை தலைமையிடமாகக் கொண்டு தனியார் அறக்கட்டளை தொழிற்பயிற்சி மையம் ஒன்று திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களைத் தங்க வைத்து, தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு ராமநாதபுரம் வைரவன்கோயில் தெருவைச் சேர்ந்த பால்சாமி மகன் பாரதிராஜா (20), இவரது நண்பரான தூத்துக்குடி மாவட்டம் கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் வெயில்ராஜ் (22) ஆகிய இருவரும் தொழிற்பயிற்சி பயின்று வந்தனர். இவர்கள் இருவரும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
இந்நிலையில் பயிற்சி முடிந்து இன்று இரவு ஓய்வாக இருந்த இவர்கள், அங்கிருந்த இரும்பு கம்பியை (தெரட்டி) எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க முயன்றனராம். அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி தென்னை மரத்திற்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பியின் மீது பட்டதாகவும், அதிலிருந்த மின்சாரம் பாரதிராஜாவைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அவரைக் காப்பாற்றச் சென்ற வெயில்ராஜ் மீதும் மின்சாரம் தாக்கியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீண்டநேரம் இவர்கள் இருவரையும் காணாத தொழிற்பயிற்சி காவலாளிகள், இருவரையும் தேடி வந்து பார்த்த போது, இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மணிகண்டம் காவல்நிலையத்துக்கு தகவல் அளி்த்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment