04.12.2014, திருச்சி:
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், புனித
ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாற்றுத் திறனாளிகள் விழாவில்,
மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி
கொண்டாடினார். ஆண்டுதோறும் டிசம்பர், 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள்
தினம் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள்
தினவிழாவில், கலெக்டர் ஜெயஸ்ரீ, மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த,
75க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்கு, கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மாணவ,
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட சமூகநல அலுவலர் உஷா, மகளிர்
திட்ட அலுவலர் கோமகன், மாவட்ட வேலை வாய்ப்பு இளநிலை அலுவலர் கலைச்செல்வன்
மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டனர்.
தர்மபுரி: மாற்றுத் திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு, நல்லம்பள்ளி
வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு
போட்டிகள் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன் தலைமை
வகித்தார். ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்து தலைவர் சரவணன் முன்னிலை வகித்து,
போட்டியை துவக்கி வைத்தார். கூடுதல் சி.இ.ஓ., சீமான், கூடுதல் திட்ட
ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கு தவளை ஓட்டம், ஓட்டப்பந்தயம், பலூன் ஊதி வெடித்தல் உட்பட
பல்வேறு போட்டிகள் நடந்தது. மேலும், 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள்,
அதியமான்கோட்டையில் உள்ள அதியமான்கோட்டத்திற்கு களப்பயணமாக அழைத்துச்
செல்லப்பட்டனர்.ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும்
ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ஓசூர்: ஓசூரில், உலக மாற்றுத்திறனாளி தின விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., பொன்குமார் உத்தரவுபடி, ஓசூர் வட்டார வள மையம் சார்பில், கடந்த, 1ம் தேதி முதல், மூன்று நாட்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மரம் நடும் விழா, மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடந்தது. மரம் நடும் விழாவை, வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் துவங்கி வைத்தார். மேலும், பள்ளி மாணவர்கள், 50 பேர், கே.ஆர்.பி., அணை மற்றும் கிருஷ்ணகிரி சிறுவர் பூங்காவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், ஓசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் முனிரெட்டி, வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் ஜெயபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்து
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும்
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் மாற்றுத் திறனாளி களுக்கு முன்னெடுக்க வேண்டிய முக்கிய
பிரச்சினைகள் நிறைய உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கையை அறிய முறையான கணக்கெடுப்பு நடத்த
வேண்டும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு
தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அவர்களின் நலனை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.