23.07.2015, புதுடெல்லி: ஐஏஎஸ் தேர்வின் மதிப்பெண் விவரங்கள், பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் முதலிடம் பிடித்த இரா சிங்கால் 53 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். நாட்டிலேயே மிகவும் கடினமான தேர்வு என வர்ணிக்கப்படும் ஐஏஎஸ் (சிவில் சர்வீசஸ்) தேர்வு 3 கட்டங்களாக ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 1,236 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி, சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடந்தது. இதற்காக 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்த போதிலும், 4.5 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற 16,933 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் இருந்து 3,308 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், 1,236 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். இந்நிலையில், தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் விவரம், யுபிஎஸ்சி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.
இதன்படி, முதலிடத்தை பிடித்த மாற்றுத் திறனாளி (பெண்) இரா சிங்கால் (டெல்லி), 2,025க்கு 1,082 (53.43%) மதிப்பெண்களை எடுத்துள்ளார். இரண்டாம் இடம் பிடித்த ரேனு ராஜ் (கேரளா) 1,056 (52.14%) மதிப்பெண்களையும், 3ம் இடம் பிடித்த நிதி குப்தா (டெல்லி) 1,025 (50.61%) மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.
No comments:
Post a Comment