26.09.2018
சென்னை: அரசு பஸ்களில் சலுகை மறுக்கப்படுவதை கண்டித்து பல்லவன் இல்லம் முன்பு நேற்று மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு இந்த பஸ் கட்டண சலுகை மறுக்கப்பட்டு வருவதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், டிக்கெட் கட்டண சலுகையை முறையாக வழங்கக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.அவர்கள் அனைவரும் பல்லவன் சாலையில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தின் நுழைவாயில் முன்புறம் தரையில் அமர்ந்திருந்தனர். இதற்கிடையில், போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களும் நேற்று பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் தங்களுக்கு, கடந்த 2015 நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் முறையாக 1ம் தேதி பென்சன் வழங்க வேண்டும், நிலுவை தொகை ரூ.2,000 கோடியை உடனே அரசு விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒரே இடத்தில் அடுத்தடுத்து 2 அமைப்புகள் போராட்டம் நடத்தியதால் பல்லவன் இல்லம் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை முதல் பல்லவன் இல்லம் அமைந்துள்ள சாலையில் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment