FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, June 26, 2013

உலகளவில் ஓவியத்தில் விருது வாங்கணும்! - சுவேதா




சாதனைக்கு 'ஊனம் ஒரு தடை அல்ல... உறுதியான மனம் மட்டுமே போதும்' என்று மீண்டும் பேசாமலேயே பேச வைத்துள்ளார் சுவேதா! ஆம்... இவருக்கு காது கேட்காது... பேச்சு வராது..!

அப்படியே முயற்சி எடுத்து திக்கி திணறி பேசினாலும் அந்த மொழி... மழலை மொழிதான்! ஆனால் இவரது ஓவியங்களில் அமைந்திருக்கும் அழகியல், வண்ணங்கள், கூர்மை என அனைத்து அம்சங்களும் நம்மிடம் பேசுகின்றன.

இந்த ஆண்டிற்கான சிறந்த தனிநபர் படைப்பாற்றல் (மாற்றுத் திறனாளி) விருதை, நமது குடியரசு தலைவரிடம் பெற்றுள்ளார் சுவேதா.

சென்னை, அரசு கவின்கலைக் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் சுவேதா, எட்டு வயது முதல் ஓவியப் பயிற்சி பெறத் தொடங்கியுள்ளார். அவரிடம் பேசிய போது அவருடைய மழலைப் பேச்சும், அதற்கு தந்தை கொடுத்த விளக்கமும்,

"சென்னையில் 1990-ம் ஆண்டில் பிறந்த எனக்கு, பேச்சும் வராது, காதும் கேட்காது. பின்னர் அடையாறு பால வித்யாலயா பள்ளியில் கல்வி பயின்றேன். அங்கே எனக்கு பேசுவதற்கு பயிற்சி அளித்தனர். ஆனாலும் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தொடர்ந்து பள்ளிக்கு போக முடியாத சூழல்.

அதனால் சில வருடங்களுக்குப் பிறகு லிட்டில் பிளவர் கான்வென்டில் சேர்ந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன்" என்று கூறும் சுவேதா, எட்டு வயது முதல் ஓவியப் பயிற்சி பெறத் தொடங்கியுள்ளார். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டே கிராபிக்ஸ் டிசைன் பயிற்சி பெற்றுள்ளார்.


ஓவியத்தில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

"மூன்று வயதிலேயே எப்போதும் பென்சில், ரப்பரோடு திரிவேன். எதையாவது கிறுக்கிக் கொண்டே இருப்பேன். படம் பார்த்து பெயர் சொல்லுதல், பூ வரைதல் மற்றும் ஏதாவது ஒரு படத்தை பார்த்தால் அதை மேலும் மெருகூட்டுதல் போன்ற வேலைகளில் ஆர்வம் அதிகம். இதனால் என்னை ஓவியப் பயிற்சி வகுப்பில் பெற்றோர் சேர்த்துவிட்டனர்.

பள்ளியில் நடந்த ஓவிய போட்டியில் பரிசு வாங்கினேன். இந்த முதல் அங்கீகாரம், எனக்கு மேலும் ஆர்வத்தை தூண்டியது. பின்னர் பிரீடம் அமைப்பில் சேர்ந்து பயிற்சியாளர் ராமசுரேஷிடம் பயிற்சி பெற ஆரம்பித்தேன். என்னுடைய இத்தனை வெற்றிகளுக்கும் ராமசுரேஷ் மற்றும் பிரீடம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் சுந்தர் ஆகியோர் முக்கிய காரணம்."


உங்கள் குடும்பத்தில் யாரேனும் கலைத் தொடர்புடையவர்களாக இருந்தார்களா?

"இல்லை... யாரும் அப்படி இல்லை. மேலும் என்னைப் போல் வாய் பேசாத, காது கேளாதவர்களும் எங்கள் குடும்பப் பின்னணியில் யாரும் இல்லை. எங்களுடைய சொந்த ஊர் மார்த்தாண்டம். அப்பா கணேசன் தமிழாசிரியர். அம்மா டெய்சி அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இருவருக்கும் ஒரே செல்ல மகள் நான்."


உங்களுடைய வாழ்க்கையின் முக்கிய திருப்பமாக எதை கருதுகிறீர்கள்?

"ஓவியத் துறையில் தேசிய விருது பெற்றது... எனது ஓவிய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பம் என்றாலும், அதற்கு அடிப்படை காரணியான பிரீடம் அறக்கட்டளையில் சேர்ந்தது என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த திருப்பம்!"


மிக முக்கியமான பாராட்டு எது?

"சமீபத்தில் டெல்லியில் நடந்த விழாவில், குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் கையால் பெற்ற தேசிய விருது. மேலும் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் பாராட்டியதும் முக்கியமானது. அதேபோல் தொடர்ந்து என்னை பாராட்டி வரும் மீடியாக்கள்."


ஓவியக் கல்லூரியில் படிப்பதுதான் உங்களுடைய விருப்பமா?

"சின்ன வயது முதலே எனக்கு ஓவியம் என்றால் ஆர்வம் அதிகம் என்பதாலும், பெற்றோர் என்னை இத்துறையிலேயே பயிற்சி அளித்து ஊக்குவித்தனர் என்பதாலும் ஓவியத்தையே நான் தேர்ந்தெடுத்தேன். என்னுடைய தோழிகள் பி.காம்., போன்ற படிப்புகளை படித்து வருகின்றனர்."


கல்லூரியில் சக மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா?

"கண்டிப்பாக... நல்ல ஒத்துழைப்பு மட்டுமின்றி, சக தோழியாகவும் என்னை நடத்துவதால், எங்கள் கல்லூரியில் எனக்கு நிறைய தோழர்கள் மற்றும் தோழிகள் உள்ளனர். மாணவர்களும், ஆசிரியர்களும் எனக்கு பெரும் துணையாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி."


ஓவியம் தவிர வேறு ஏதாவது துறையில் பரிச்சயம் உண்டா?

"பரதநாட்டியம் தெரியும், ஓராண்டு கற்றுக் கொண்டேன். அப்புறம் கிராபிக்ஸ் டிசைன், அனிமேஷன், சிற்பக்கலை ஆகியவையும் தெரியும்."


ஓவியத்தில் எந்த மாதிரியான படைப்புகளை உருவாக்குவீர்கள்?

"வாட்டர் கலர் பெயின்டிங், கேன்வாஷ் பெயின்டிங், ஆயில் பெயின்டிங், பென்சில் ஸ்கெட்சிங் என அனைத்து வகை ஓவியங்களையும் படைப்பேன்."


எதிர்காலத்தில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?

"சமீபத்தில் தேசிய விருது பெற்றுள்ளேன். அடுத்து உலகளவில் ஓவியத்தில் விருது வாங்க வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த ஓவியர் என்று புகழ் பெறவேண்டும்."


உங்களுக்கு பிடித்த வண்ணங்கள் எவை?

"மஞ்சள், ஆரஞ்சு, பச்சை ஆகிய வண்ணங்கள் பிடிக்கும்."


நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?

"தேசிய அளவில் விருது பெற்ற நான், தமிழக முதல்வரை சந்தித்து ஆசி பெற விரும்புகிறேன்."


ஒரு மாற்றுத் திறனாளியாக ஓவியத்தை சின்ன வயது முதலே கற்றுத் தேர்ந்த சுவேதா, தனது வீட்டு மாடியில் 500 சதுர அடி பரப்பளவில் ஓவியக் கலைக்கூடம் அமைத்துள்ளார். இங்கு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்து வருகிறார். குறிப்பாக மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு 'இலவசமாக' பயிற்சி அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


சுவேதா பேச்சுத் திறன் குறை உடையவராக இருந்தாலும், அவருடைய பயிற்சி நிறைவாக இருப்பதாக கூறுகின்றனர் பயிற்சி பெறும் மாணவர்கள். அதுமட்டுமின்றி தூரிகை மொழி என்ற பெயரில் இரு தனிநபர் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார் சுவேதா. மேலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் குழு ஓவியக் கண்காட்சியிலும் பங்கு பெற்றுள்ளார். பெங்களூர், மைசூர் ஆகிய நகரங்களில் நடந்த 'சித்திர சந்தை'களிலும் பங்கு பெற்றுள்ளார். இவருக்காக நாம் ஒருமுறை 'ஜோரா... கைத்தட்டலாமே?!'

Thanks to Kootal.

No comments:

Post a Comment