10.08.2016, நெல்லை,
பராமரிப்பு உதவித்தொகை வழங்கக் கோரி நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்தினாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.முற்றுகை போராட்டம்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் நெல்லை மாவட்ட பிரிவு சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் வரத்தொடங்கினர். பகல் 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன், மாவட்ட செயலாளர் குமாரசாமி, நெல்லை மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் ராமகுரு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கோரிக்கைகள்
40 சதவீதம் ஊனம் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிபந்தனை இல்லாமல் மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.1,000 வழங்க வேண்டும். அதிக அளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 வழங்க வேண்டும், தென்காசி, சங்கரன்கோவில், அம்பை, சேரன்மாதேவி, வள்ளியூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறாளிகள் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கொடுத்தனர். பின்னர் அவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment