27.08.2016, மதுரை, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். தங்களது வாழ்விலும் திருமணம் நடக்குமா என்ற ஏக்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் நல் வாழ்க்கை அமையும் என எடுத்து காட்டும் வகையில் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடந்தது.திருமணம் செய்ய விரும்பும் மாற்றுதிறனாளிகள் தங்களுக்கு எந்த மாதிரியான துணை தேவை என கூறி ஜோடியினை தேர்வு செய்தனர். 'இவர்களை பார்த்து 'பாவம் என பரிதாபபட வேண்டாம். வாழ்க்கை துணையாக்கி ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்ந்து காட்டுங்கள்' என்ற அறிவிப்பு பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தியது.
அன்னநடை நடந்து கொஞ்சும் மொழி பேசி இளம்பெண்கள் சிலர் சுயம்வரத்திற்கு வந்து 'எங்களுக்கு மாற்றுத்திறனாளி மாப்பிள்ளை தேவை' எனக்கூறி கைதட்டலை பெற்றனர்.
கடந்த ஆண்டு சுயம்வரத்தில் புகைப்பட கலைஞர் வாசுதேவன், மாற்றுத்திறனாளி பூங்கோதையை வாழ்க்கை துணையாக்கினார். தற்போது தங்கை பூங்கொடிக்கு மாற்றுத்திறனாளி மண
மகனை தேர்வு செய்ய வந்திருந்தார்.
''மாற்றுத்திறனாளி மனைவியுடன் மகிழ்ச்சியாக உள்ளேன். என் தங்கையும் இதுபோல் மகிழ்ச்சியாக வாழ மாற்றுத்திறனாளியை விரும்புகிறார். அவரது வாழ்வில் ஒருவருக்கு உதவும் பாக்கியம் கிடைக்கும்,'' என்கிறார் வாசுதேவன்.
பட்டதாரி பாக்கியலட்சுமி,''மாற்றுத்திறனாளிக்கு உதவ வேண்டும் என்பது சிறுவயது முதலே ஆர்வம். அதனால் மாற்றுத்திறனாளி தேர்வு செய்கிறேன்'' என்றார். கேட்டரிங் படித்த ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை தேர்வு செய்ய வந்திருந்தார்.
சுயம்வரத்தில் தேர்வாகும் ஜோடிகளுக்கு பூ வைத்தல், நிச்சயதார்த்தம் என சடங்குகள் முடிந்து, டிசம்பரில் சென்னையில் திருமணம் நடக்க உள்ளது. ஜோடிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சீர்வரிசை பொருட்கள் வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment