18.08.2016, ஈரோடு: அரசாணை வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் அமல்படுத்த அதிகாரிகள் மறுப்பதால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாற்றுதிறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மையை பொறுத்து மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. 40 சதவீத ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா 40 சதவீத ஊனம் இருந்தால் இனி உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணை இதுவரை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் முன்வராததால் மாற்றுதிறனாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட சிஐடியு நிர்வாகி பொன்பாரதி கூறுகையில், ‘40 சதவீத ஊனம் இருந்தால் உதவி தொகை வழங்கலாம் என்ற அரசாணை கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணைப்படி உதவி தொகை கேட்டால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். 6 மாதங்களாக இதே பதிலை தான் அதிகாரிகள் கூறிவருகின்றனர்.
வழக்கமாக சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டும் அறிவிப்புகள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டை உறுதிபடுத்துவதாகத்தான் இதை பார்க்க முடிகின்றது. முதலமைச்சரின் உத்தரவையும், அரசாணையையும் அதிகாரிகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பொன்பாரதி கூறினார்.
No comments:
Post a Comment