02.09.2016 ராமநாதபுரம்,-ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளி மருத்துவ சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே எருமைகுளத்தை சேர்ந்த கணபதி மகன் பாலமுருகன்(24). அவருடைய வலது கையில் உள்ள ஆள்காட்டி விரல் ஒரு விபத்தில் துண்டானது. இதையடுத்து அவர் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சான்றிதழ் பெற ராமநாதபுரம் மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த சான்றிதழை வழங்க அலுவலக உதவியாளர் ராமகிருஷ்ணன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ரூ.5 ஆயிரம் இல்லையென்று கூறிய பாலமுருகன், ரூ.3 ஆயிரம் தர ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து அவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். பாலமுருகன் நேற்று அலுவலகத்தில் அந்த பணத்தை ராமகிருஷ்ணனிடம் கொடுக்க முயன்றார். அப்போது லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மதியழகன் தலைமையில் மறைந்திருந்த போலீசார், ராமகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
No comments:
Post a Comment