டிச.02,2016. மாற்றுத்திறனாளிகள், மற்ற மனிதருக்குச் சமமாகவும், மதிப்புமிக்கவராகவும் முழுமையாக ஏற்கப்படுவதற்கு, மேலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.
டிசம்பர் 03, இச்சனிக்கிழமையன்று, கடைப்பிடிக்கப்படும், உலக மாற்றுத்திறனாளிகள் நாளுக்கு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், உலகளவில் பரவலாக அமல்படுத்தப்பட்ட மனித உரிமைகள் ஒப்பந்தங்களில், மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒப்பந்தமும் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், 169 நாடுகளின் கையெழுத்துடன், மாற்றுத்திறனாளிகள் குறித்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பொது அவை, இசைவு தெரிவித்தது என்றும், கூறியுள்ளார் பான் கி மூன்.
மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தில் முழுமையாக ஏற்கப்படுவது, 2030ம் ஆண்டின் ஐ.நா.வின் இலக்கை எட்டுவதற்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகள் களையப்பட்டு, அவர்கள், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் துறைகளில் முழுமையாக ஏற்கப்படுமாறு அழைப்பு விடுத்தார்.
உலகில் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள், உடல் அல்லது, மன வளர்ச்சியில், ஏதாவது ஒரு குறைபாடுள்ளவர்கள். மாற்றுத்திறனாளிகளுள், பத்து கோடிக்கு அதிகமானவர்கள் சிறார். மாற்றுத்திறனாளிகளுள், எண்பது விழுக்காட்டினர், வளரும் நாடுகளில் உள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment