14.12.2016, நாடாளுமன்ற மாநிலங்களவையில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மசோதா ஒருமனதாக புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ரூபாய் மதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவற்றை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவையில் "2014-ஆம் ஆண்டைய மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா'வை விவாதமின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் புதன்கிழமை வலியுறுத்தினர்.குறிப்பாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது குலாம் நபி ஆசாத் பேசுகையில், "மாநிலங்களவையில் இந்த மசோதாவை புதன்கிழமை நிறைவேற்றவில்லையெனில், மக்களவையில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (நாடாளுமன்ற கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை நிறைவடைவதை மேற்கோள்காட்டினார்) அதை நிறைவேற்றுவது கடினம்; எனவே விவாதமின்றி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்' என்றார்.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, அந்த மசோதாவை உடனடியாக அவையில் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். இதை மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியனும் ஏற்றுக் கொண்டார். எனினும், அந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றுவதை அவர் விரும்பவில்லை. சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த உறுப்பினர்கள் விவாதத்தில் பேச வேண்டும் என்று குரியன் தெரிவித்தார்.
அதன்படி, உடனடிக் கேள்வி நேரத்தில் நேரத்தில் அந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது. பிறகு, உணவு இடைவேளை நேரத்துக்குப் பிறகு அவை கூடியதும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நிறைவடைய 3 நாள்கள் மீதமிருந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாப்பும், உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், 2014-ஆம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மசோதா கொண்டு வரப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுவோருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையில் அபராதமும் விதிக்கப்பட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment